தரிசு நிலத்தில் பல்வகை பயிர் சாகுபடி
சிதம்பரம், பிப். 10: இயற்கைச் சீற்றங்கள், தொழிலாளர் பற்றாக்குறை, தொழிற்சாலை பாதிப்பு, நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் தரிசாக வேளாண் உற்பத்திக்கு பயன்பட ம


சிதம்பரம், பிப். 10: இயற்கைச் சீற்றங்கள், தொழிலாளர் பற்றாக்குறை, தொழிற்சாலை பாதிப்பு, நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பல லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் தரிசாக வேளாண் உற்பத்திக்கு பயன்பட முடியாத நிலையில் உள்ளன.
இத்தகைய சூழலில் தரிசு நிலங்களை குறைந்த செலவில் எளிய தொழில் நுட்பங்களைக் கொண்டு மாற்ற, மகாராஷ்டிர மாநில முன்னோடி விவசாயி ஸ்ரீபாத தபோல்கர் புதிய விவசாய முறையை அறிமுகம் செய்து பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை 200 நாள்களில் வளம் பெறச் செய்துள்ளார். இம்முறையை தமிழக சிறு மற்றும் குறு விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.
தரிசு நிலத்தில் பயிர் வளர்ப்பு முறை: தமிழக விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களில் ரசாயன உரங்களால் வளம் இழந்து போன நிலத்திலும், இயற்கை விவசாயத்திற்கு ஏற்ப தயார் செய்ய பயிர் வளர்ப்பு முறையில் ஈடுபட வேண்டியது அவசியம்.
இப்புதிய விவசாய முறையில் விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்தில் பட்டியலில் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ள பல்வகை பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு பல்வேறு பயிர்களை தயார் செய்து விவசாயிகள் தங்களின் வளமிழந்த தரிசு நிலங்களில் நேரடியாக விதைப்பை மேற்கொள்ள வேண்டும். ஐந்து வகைப் பயிர்களும் நிலத்தில் நன்றாக வளர்ந்து 50 முதல் 60 நாள்களில், அவற்றை மடக்கி நிலத்தை உழவு செய்ய வேண்டியது அவசியம்.
இவையாவும் நன்றாக மட்கி, நிலத்தில் நுண்ணுயிர்களைப் பெருகச் செய்யும்.
இதன் மூலம் நிலத்தின் தன்மை வெகுவாக மாறி பல நுண்ணூட்டக் குறைபாடுகள் களைந்து 20 நாள்களிலேயே நிலம் நன்றாக வேளாண் சாகுபடிக்கு தயார் நிலையை அடைந்துவிடும்.
பிற பயன்கள்: வடமாநிலங்களில் விவசாய நிலங்களில் பல்வகை பயிர் வளர்ப்பு முறை வாயிலாக இயற்கை விவசாய முறைகள் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் பெருக்கம் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு பெரிதும் உதவியுள்ளது.
பல்வகை பயிர் வளர்ப்பு நிலத்தின் தன்மையை மாற்றி இயற்கை வளங்கள் வாயிலாக விவசாயிகள் குறைந்த செலவில், மனித உழைப்பில் தங்களின் தரிசு நிலங்களை வளங்காணச் செய்துள்ளது.
எனவே தமிழக விவசாயிகள் தங்களின் தரிசு நிலங்கள், வளமிழந்த நிலங்கள், தொழிற்சாலையால் மாசுபட்ட நிலங்கள் ஆகியவற்றை மேற்கண்ட பல்வகை பயிர் வளர்ப்பு முறையில் உழவு செய்து மாசுபட்ட நிலங்களை குறைந்த செலவில் மாற்றி இயற்கை வேளாண்மை வாயிலாக அதிக லாபம் பெறச் செய்ய முடியும் என்கிறார் விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன்.
பயிர் வளர்ப்பு அட்டவணை
தானிய வகைகளில் நான்கு: சோளம் 1 கிலோ, கம்பு 500 கிராம், தினை 250 கிராம், சாமை 250 கிராம்.
பயிறு வகைகளில் நான்கு: உளுந்து 1 கிலோ, பாசிப்பயிறு 1 கிலோ, தட்டைப்பயிறு 1 கிலோ, கொண்டைக்கடலை 1 கிலோ.
எண்ணெய் வித்துகளில் நான்கு: எள் 500 கிராம், நிலக்கடலை 2 கிலோ, சூரியகாந்தி-2 கிலோ, ஆமணக்கு 2 கிலோ.
பசுந்தாள் பயிறுகளில் நான்கு: தக்கைப்பூண்டு 2 கிலோ, சணப்பு 2 கிலோ, நரிப்பயிறு 500 கிராம், கொள்ளு 1 கிலோ.
நறுமணப் பயிறுகளில் நான்கு: கடுகு 100 கிராம், வெந்தயம் 250 கிராம், சீரகம் 250 கிராம், கொத்தமல்லி 1 கிலோ.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...