சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

கூட்டுறவு வங்கிகளில் காவலாளிகள் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

திருத்துறைப்பூண்டி  : சிக்கனத்தைக் காரணம் காட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் காவலாளிகள் பணியமர்த்தப்படாததால், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.   எனவே, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:31 am

ஏ. ரவி

திருத்துறைப்பூண்டி  : சிக்கனத்தைக் காரணம் காட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் காவலாளிகள் பணியமர்த்தப்படாததால், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

  எனவே, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் நகைகளைப் பாதுகாக்க வங்கி நிர்வாகம் இரவுக் காவலாளிகளை பணியமர்த்த முன் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கி வருபவை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள். தமிழகம் முழுவதும் சுமார் 4563 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளும், 30 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், நூற்றுக்கணக்கான அதன் கிளைகளும் உள்ளன.   தமிழகத்தில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு, உணவு உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடைய காரணமாக இருந்தவை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளே என்றால் அது மிகையாகாது.

  ஆனால், இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலை காரணமாக விவசாயிகளின் கடன்களை அரசு தள்ளுபடி செய்து வருவதால், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் நலிவடைந்து வருகின்றன.  ஆனால், தற்போது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன்களாக வழங்கப்பட்டு வருகின்றன.

   மேலும், கடந்த ஆண்டு முதல் விவசாயிகளுக்கு வேளாண்மை சார்ந்த பணிகளுக்கு வட்டி இல்லாமல் கடன் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், இந்த வங்கிகளில் கடன் பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், இந்த வங்கிகளில் காவலாளிகள் பணியிடம் தேவையில்லை என முடிவு செய்து, வங்கி நிர்வாகம் "மாஸ்டர் பாலிசி' என்ற காப்பீட்டுத் திட்டத்தில் பிரீமியம் செலுத்தி வருகிறது.

   காவலாளிகளுக்கான ஊதியத்தைவிட இந்த காப்பீட்டு பிரீமியம் தொகை குறைவாக உள்ளதால், இரவுக் காவலாளிகளைப் பணியமர்த்த வங்கி நிர்வாகம் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.   பல இடங்களில் அரசு புறம்போக்கு நிலங்களில் ஊருக்கு வெளியே இந்த வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. பல வங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள அபாய எச்சரிக்கைக் கருவி கொள்ளை நடைபெறும் சமயங்களில் சரிவர வேலை செய்வதில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

    மேலும், வங்கிகளில் கொள்ளை போகும் நகைகளுக்கு சந்தை மதிப்பிற்கு முழுத் தொகையும் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியே. வங்கியில் 8 கிராம் நகைக்கு ஒரு கிராம் தள்ளுபடி, மேலும் கிராம் 1-க்கு ரூ. 1050 என்ற அளவிலேயே கடன் வழங்கப்படுவதால், அந்தத் தொகைக்கே காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீடு வழங்கப்படும். இது சந்தை மதிப்புக்கு சமம் ஆகாது.  இதற்கும் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, தடயவியல் நிபுணர்கள் சோதனை போன்றவை  முடிந்து, அது முழுமையாக நிறைவடைந்தால் மட்டுமே காப்பீட்டு நிறுவனம் காப்பீட்டுத் தொகையை வழங்கும்.

   வங்கிப் பெட்டகத்தின் சாவி வங்கிச் செயலரிடமும், முதுநிலை எழுத்தரிடமும் இருக்க வேண்டும். ஆனால், இரண்டு சாவியும் வங்கியிலேயே வைக்கப்பட்டதால் கொள்ளை நடைபெற்ற சம்பவமும் அண்மையில் ஒரு வங்கியில் நடைபெற்றதும் தெரிய வந்ததுள்ளது. இது போன்ற தருணங்களில் காப்பீட்டுத் தொகை கிடைக்க சாத்தியமே இல்லை.   எனவே, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விவசாயிகளின் நகைகளின் பாதுகாப்பைக் கருதி, வங்கி நிர்வாகம் நிரப்பப்படாமல் உள்ள காவலாளிகள் பணியிடங்களை நிரப்ப முன்வரவேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.