/

"அஞ்சலக ஆயுள் காப்பீடு' தனியார் துறைக்கும் விரிவுபடுத்தப்படுமா?

சென்னை, ஜூன் 20: "அஞ்சலக ஆயுள் காப்பீடு' திட்டம் தனியார் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தனியார் துறை ஊழியர்களிடையே எழுந்துள்ளது. இதுதொடர்பாக பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வருவதா

Updated On :20 செப்டம்பர் 2012, 12:54 pm

சென்னை, ஜூன் 20: "அஞ்சலக ஆயுள் காப்பீடு' திட்டம் தனியார் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தனியார் துறை ஊழியர்களிடையே எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வருவதாக அஞ்சலக அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.

  தபால்துறை ஊழியர்களுக்காக 1884-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டதுதான் "அஞ்சலக ஆயுள் காப்பீடு' திட்டம். பின்னர் மத்திய, மாநில அரசு ஊழியர்களும், அரசு உதவி பெறும் நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களும் பயன் பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

  எல்.ஐ.சி., உள்பட மற்ற தனியார் காப்பீடு நிறுவனங்களைக் காட்டிலும் மிகக் குறைந்த பிரீமியம் தொகை செலுத்தி, அதிக போனஸ் தொகையுடன் பலன் தரக் கூடியதுதான் இந்த "அஞ்சலக ஆயுள் காப்பீடு' திட்டத்தின் சிறப்பாகும். இதில் சுரக்ஷா, சந்தோஷ், சுமங்கல், குழந்தைகளுக்கான திட்டம், சுவிதா, யுகல் சுரக்ஷா உள்ளிட்ட 6 வகையான திட்டங்கள் உள்ளன.

÷உதாரணமாக, சுரக்ஷா (முழு ஆயுள் காப்பீடு) திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரை உடையவர்கள் சேர முடியும். 35 வயதுக்காரர் 20 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தில் சேர்கிறார் என்றால், ரூ. 10 ஆயிரம் காப்பீடுக்கு பிரீமியம் தொகையாக ஒவ்வொரு மாதமும் ரூ. 28 செலுத்த வேண்டும்.

÷அதாவது முதிர்வுத் தொகை ரூ. 5 லட்சத்துக்கு இவர் பாலிஸி எடுக்கிறார் என்றால், மாதம் ரூ. 1,400 பிரீமியம் செலுத்த வேண்டி வரும். மேலும் இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1,000-க்கு போனஸ் தொகையாக ரூ. 90 சேர்க்கப்பட்டு வரும்.

இதுதவிர, திட்டம் தொடங்கி 4 ஆண்டுகளுக்கு முதிர்வு தொகையில் 90 சதவீத கடன் பெறும் வசதி, வருமான வரிச் சலுகை என பல்வேறு சலுகைகள் இத்திட்டத்தில் உள்ளன.

இதுபோல் மற்ற அனைத்து திட்டங்களும், எல்.ஐ.சி. உள்பட மற்ற காப்பீடு நிறுவனங்களைக் காட்டிலும் குறைந்த பிரீமியம், அதிக பலன் கொண்டவை.

÷பணி நிரந்தரம், வருங்கால வைப்பு நிதி, 6-வது ஊதியக் குழு பரிந்துரையின் படி பன்மடங்கு ஊதிய உயர்வு என பல்வேறு சலுகைகளை பெற்று வரும் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டம் கூடுதல் லாபம் தரக்கூடியதாக அமைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 4,36,092 பேர் இணைந்துள்ளனர்.

"கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு' திட்டம்: இந்த நிலையில் கிராமப்புற மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு "கிராமப்புற அஞ்சலக ஆயுள் காப்பீடு' திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

இதில் கிராமப்புறத்தில் முகவரி உள்ளவர்கள் மட்டுமே சேர முடியும். மேலும் குறைந்தபட்சம் ரூ. 10 ஆயிரமும், அதிகபட்சம் ரூ. 3 லட்சம் வரையிலான பாலிஸி மட்டுமே இவர்கள் போட முடியும்.

இதிலும் முழு ஆயுள் காப்பீடு திட்டம், குறித்தக் கால காப்பீடு திட்டம், குழந்தைகள் ஆயுள் காப்பீடு திட்டம் என 6 வகையான திட்டங்கள் உள்ளன. இது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் அதிக பலனைத் தராது என்றபோதும், ஓரளவு நல்ல பலனைத் தரக்கூடியது என்கின்றனர் அஞ்சலக அதிகாரிகள்.

தனியார் நிறுவனங்களுக்கு விரிவுபடுத்தப்படுமா? தனியார் கல்லூரிகள், ஊடகத் துறை, கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எந்தவித எதிர்கால பாதுகாப்பும் இல்லாத நிலை உள்ளது. பணியிலிருக்கும் போது ஓரளவு மதிப்பான ஊதியத்தை பெற்ற போதும், ஓய்வு பெற்றபின் இவர்களுக்கு பாதுகாப்பு இருப்பதில்லை. இதில் பல நிறுவனங்களில் நிறுவன சட்டத்தின்படி ஊழியர்களை, வருங்கால வைப்பு நிதி திட்டத்திலும் சேர்ப்பது கிடையாது. இதனால் ஊழியர்களும், அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

அதேநேரம் அஞ்சலகங்களில் பணிபுரியும் தாற்காலிக ஊழியர்களும் (ஜி.டி.எஸ்) அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர முடியாத நிலை உள்ளது. எனவே, இத்திட்டம் தனியார் நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.

  இதுகுறித்து தலைமை தபால் துறை அதிகாரி (தமிழ்நாடு வட்டம்) சாந்தி நாயர் கூறியது:

இந்தத் திட்டத்தில் தங்களையும் சேர்க்குமாறு தனியார் நிறுவன ஊழியர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வருகின்றன. இதை மத்திய நிதி அமைச்சகத்துக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.