டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஐந்து மாதங்களாக ஊதியம் இல்லை: கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் தவிப்பு

சென்னை, பிப்.28:  தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் நிலைமை பரிதாபகரமாக மாறியுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1,000 கூ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:12 pm

வி.தேவதாசன்

சென்னை, பிப்.28:  தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் நிலைமை பரிதாபகரமாக மாறியுள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 1,000 கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களில் சுமார் 3,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதுபோல, வீட்டு வசதிக் கடனும் தள்ளுபடி செய்யப்படும் என்ற கருத்து கடன் வாங்கியோர் மத்தியில் நிலவுகிறது. இதனால் வழங்கப்பட்ட கடனில் சுமார் ரூ.2,500 கோடிக்கும் மேல் வசூல் ஆகாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த அக்டோபர் முதல் வீட்டு வசதி சங்க ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. வசூல் செய்யும் கடன் நிலுவைத் தொகையில் மூன்று சதவீதம் மட்டும் சங்கங்களின் நிர்வாகச் செலவுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. இது மிகவும் சொற்பத் தொகை ஆகும்.

எனவே, வசூல் ஆகும் தொகையை மாநில கூட்டுறவு வீட்டு வசதி இணையத்துக்கு செலுத்தி விட்டு, கடந்த 5 மாதங்களாக ஊதியம் இன்றி ஊழியர்கள் தவிக்கின்றனர்.

இதற்கிடையே பணி வரன்முறை செய்யப்படாத மற்றும் கூடுதல் ஊழியர்கள் சுமார் 1000 பேரை வீட்டுக்கு அனுப்பும் முயற்சிகள் சில வாரங்களுக்கு முன் நடைபெற்றன. எனினும் தொழிற்சங்க நிர்வாகிகளின் முறையீட்டால், அந்த நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.

ஆனால் ஊதியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. நிலுவை ஊதியம் முழுவதும் மொத்தமாகக் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வட்டிக்கு கடன் வாங்கி  பெரும்பாலான ஊழியர்கள் குடும்பத்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மத்தியில் இப்போது சோர்வும், அச்சமும் கூடி வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன (சி.ஐ.டி.யு. சார்பு) பொதுச் செயலாளர் ஏ. கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

கடன் பெற்றோர் செலுத்த வேண்டிய வட்டியில் சலுகை, அபராத வட்டி ரத்து, நலிந்தோருக்கு கடன் ரத்து என ரூ.813 கோடியை மாநில அரசு தள்ளுபடி செய்தது. இத்தொகையில் 2 சதவீத விளிம்புத் தொகை சங்கங்களுக்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை.

புதிய கடன் வழங்க பல ஆண்டுகளாக எந்த நிதியுதவியையும் செய்யாத மாநில அரசு, இப்போது 5 மாதங்களாக ஊதியமும் வழங்கவில்லை. ஊழியர்களை காக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

தொ.மு.ச. பேரவைப் பொதுச் செயலாளர் மு. சண்முகம் கூறியதாவது:

சங்கங்கள் பலவும் பொருளாதார ரீதியாக மிகவும் நலிந்து விட்டன. எனவே, விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினால், பெருமளவு ஊழியர்கள் பணப் பலன்களைப் பெற்றுக் கொண்டு ஓய்வு பெற தயாராக உள்ளனர்.

பட்டதாரி ஊழியர்களை காலியாக உள்ள மத்திய கூட்டுறவு வங்கிப் பணியிடங்களில் நியமிக்க வேண்டும். பள்ளிக் கல்வித் தகுதி மட்டும் உள்ளவர்களை நியாய விலைக் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகளில் பணியமர்த்த வேண்டும் என எங்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

மேலும், சங்கங்களை இணைத்து, ஒரு தாலுகாவுக்கு ஒரு சங்கம் மட்டும் என்ற வகையில் சங்கங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நிர்வாகச் செலவும் குறையும். ஊழியர்களும் பாதுகாக்கப்படுவார்கள். எங்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது. இவை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறோம் என்றார் சண்முகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.