/

தபால் துறையில் பாழாகும் "பிராஜக்ட் ஆரோ': உரிய நேரத்தில் செல்லாத கடிதங்கள்

சென்னை, மார்ச், 21: தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் "பிராஜக்ட் ஆரோ' திட்டம் பாழாகி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், கடிதங்களின் பட்டுவாடா குறித்து பதிவு செய்யப்படும் தகவல்கள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:35 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, மார்ச், 21: தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் "பிராஜக்ட் ஆரோ' திட்டம் பாழாகி வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ், கடிதங்களின் பட்டுவாடா குறித்து பதிவு செய்யப்படும் தகவல்கள் மூடி மறைக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மத்திய அரசின் "பிராஜக்ட் ஆரோ' திட்டத்துக்கு 200 தபால் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தபால் நிலையத்திலும் நல்ல கட்டடம், கம்ப்யூட்டர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும், போதுமான பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். 200 தபால் நிலையங்களும் இணையதளம் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் எந்த தபால் நிலையத்தில் யார் எவ்வளவு மணி நேரம் பணி புரிந்தார்கள், எத்தனை கடிதங்களைக் கையாண்டனர் என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

முழுத் தகவல் இல்லை: ஒவ்வொரு தபால் நிலையத்திலும் ஊழியர்களின் பணிகள் குறித்த தகவல்களை அன்றைய தினம் மாலை கம்ப்யூட்டர் மூலம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

 ""பட்டுவாடா செய்த கடிதங்கள், முகவரி மாறி வந்தவை போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்தத் தகவல்கள் முறையாகத் தெரிவிக்கப்படுவதில்லை. 100 கடிதங்களை ஒரே நாளில் ஒரு தபால் ஊழியரால் பட்டுவாடா செய்ய முடியாது. 90 கடிதங்களை மட்டும் பட்டுவாடா செய்வார். ஆனால், தலைமை அலுவலகத்துக்குச் செல்லும் பணிகள் குறித்த விவரத்தில் இந்த 10 கடிதங்களும் "முகவரி மாறி வந்தவை, அனுப்புநருக்கே சென்று விட்டது' எனத் தெரிவிப்பர். இந்த 10 கடிதங்களும் தபால் ஊழியரிடமே இருக்கும். மறு நாள் அல்லது அதற்கு மறு நாள் உரியவர்களிடம் கடிதம் சென்று சேர்க்கப்படும்'' என்கிறார் தபால் துறையைச் சேர்ந்த ஊழியர்.

காரணம் என்ன: உண்மையை மறைக்கும் ஊழியர்களின் இந்தச் செயலுக்கு தபால் துறையில் உள்ள அதிகாரிகளே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

""பிராஜக்ட் ஆரோ திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த தகுதி வாய்ந்த ஊழியர்கள் தபால் துறையில் இல்லை. உதாரணத்துக்கு, தென் மாவட்டத்தில் ஒரு தபால் அலுவலகத்தில் 5 கண்காணிப்பாளர்கள், 34 எழுத்தர்கள் மற்றும் தபால் ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால், 5 கண்காணிப்பாளர்கள் மற்றும் 4 ஊழியர்கள் மட்டுமே இருக்கின்றனர். அவர்களை வைத்துக் கொண்டு பிராஜக்ட் ஆரோ திட்டத்தை எப்படி சிறப்பாகச் செயல்படுத்த முடியும். மேலும், இந்தத் திட்டத்தில் சிறப்பாகப் பணியாற்றும் சில ஊழியர்களும் கசக்கிப் பிழியப்படுகின்றனர். அவர்களுக்கு எந்தப் பதவி உயர்வும் அளிக்கப்படுவதில்லை. சிறப்பான பணியைக் காரணம் காட்டி, போதுமான தகுதி இருந்தும் உயர் பதவிகளை அளிக்க தபால் துறையின் மண்டல அதிகாரிகள் மறுக்கின்றனர். எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு அந்த உயர் பதவிகள் அளிக்கப்படுகின்றன'' என்று புகார் தெரிவிக்கின்றனர் ஊழியர்கள். கிராம மக்களை தபால் துறையின் பக்கம் ஈர்க்க கொண்டு வரப்பட்ட "பிராஜக்ட் ஆரோ' திட்டம் பாழாகும் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதை தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரும், தபால் துறை நிர்வாக அதிகாரிகளும் இனியாவது கவனிப்பார்களா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.