சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் துறைமுகத்திலிருந்து கோதுமை இறக்குமதி செய்தது. எம்.எஸ்.சி. பெக்கி என்ற கப்பலில் 50 கண்டெய்னர்களில் கொண்டுவரப்பட்ட 1,250 டன் கோதுமையின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி ஆகும். தற்போது சென்னையை அடுத்த மீஞ்சூரில் உள்ள தனியார் சரக்குப் பெட்டக நிலையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கோதுமை இறக்குமதி செய்ய மத்திய பூச்சிக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் மத்திய உணவு பொருள் ஆய்வு துறைகளின் ஆய்வக முடிவுகளின் அடிப்படையிலான அனுமதி தேவை. இந்த ஆய்வக முடிவுகளின்படிதான் இறக்குமதியான சரக்குகளை சுங்கத் துறையினர் விடுவிப்பது வழக்கம்.