சென்னை, மார்ச் 30: தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகள் அனைத்திலும் ஒரே மாதிரியான எழுத்துரு (font) பயன்படுத்தப்படுவதில்லை. இதனால், நிர்வாக ரீதியாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.
÷தமிழகத்தில் தலைமைச் செயலகம் முதல் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் கணினியின் பயன்பாடு அதிகமாக உள்ளது. கோப்புகளை தயாரிப்பது, ஊழியர்கள் குறித்த விவரங்களை சேகரித்து வைப்பது, அரசாணை தயாரித்து வெளியிடுவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் கணினி மூலமே நடைபெறுகின்றன. கோப்புகளை கணினியில் கையாளும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்ற கருத்தும் நிலவுகிறது.
÷ஆனால், அரசுத் துறைகளின் கணினியில் பயன்படுத்தப்படும் எழுத்துருக்கள் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு துறைக்கும் இது வேறுபடுகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஒரு செய்தியை இ}மெயில் மூலம் அனுப்பினால், எழுத்துரு பிரச்னை காரணமாக சென்னையில் அதைப் படிக்க முடிவதில்லை. இந்தப் பிரச்னை அரசுத் துறைகளில் தொடர்கதையாகி வருகிறது.
பல லட்ச ரூபாய் செலவு: ஒவ்வொரு அரசுத் துறையும் தனியாரிடம் இருந்து எழுத்துருக்களை கொள்முதல் செய்கின்றன. இதற்கான, உரிமக் கட்டணமாக ஒவ்வொரு துறையும் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய்களை செலவு செய்கின்றன.
÷எழுத்துருக்களை தயாரித்து வழங்க "எல்காட்' நிறுவனம் முயற்சிகளை எடுத்தது. ஆனால், அது கை கூடவில்லை. அரசின் மிகப் பெரிய துறைகள் எழுத்துருக்களுக்காக தனியாரை நாடும் நிலை இன்றும் தொடர்கிறது.
2006-ம் ஆண்டில்: 2006-2007-ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் எழுத்துருக்களை உருவாக்குவது குறித்து கூறப்பட்டுள்ளது.
÷எழுத்துருக்களுக்காக அதிகம் செலவு செய்யப்படுகிறது எனவும், இதைக் குறைக்க அரசு அலுவலகங்களுக்கு எழுத்துருக்களை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக, ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், 2007-2008-ம் ஆண்டு தகவல் தொழில் நுட்பத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், 16 "பிட்' தமிழ் எழுத்துரு குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க முனைவர் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. 2008}2009}ம் ஆண்டு அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில், குழுவின் இறுதி அறிக்கை எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்பட்டது. இதன்பின்பு, எழுத்துருக்களை தமிழக அரசே உருவாக்குவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
ஒருங்குறி (யூனிகோட்): எழுத்துரு பிரச்னையைப் போக்க ஒருங்குறி முறை உள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஒருங்குறி முறையால் தமிழ் எழுத்துகள் எந்த எழுத்துருவாக இருந்தாலும் அதைப் படிக்கலாம் என்பது நிஜம். ஆனால், தமிழக அரசுக்கென தனியாக எந்த எழுத்துருவும் இல்லாமல் தனியாரிடம் இருந்து அவற்றைப் பெறுவது எந்த வகையில் நியாயம் என அரசுத் துறை ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்காக ஆண்டுதோறும் செலவிடப்படும் கோடிக்கணக்கான ரூபாய்க்குப் பதிலாக, புதிய எழுத்துருக்களை அரசே உருவாக்கலாம் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
÷செம்மொழி மாநாட்டின் ஒரு பகுதியாக, இணைய மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் முக்கிய பிரச்னையாக தமிழக அரசுத் துறைகளுக்கு நிலையான ஒரு எழுத்துருவை உருவாக்குவது குறித்து கட்டாயம் விவாதிக்க வேண்டும் என்று தமிழறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.