/

வாடகைக் கட்டடங்களில் இயங்கும் அரசுத் துறைகள் பழைய தலைமைச் செயலகத்துக்கு மாறுகின்றன

சென்னை, மே.2: சென்னையில் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் அரசுத் துறைகளை, பழைய தலைமைச் செயலகத்துக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எத்தனை கட்டடங்கள் உள்ளன என்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:52 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, மே.2: சென்னையில் வாடகைக் கட்டடங்களில் இயங்கும் அரசுத் துறைகளை, பழைய தலைமைச் செயலகத்துக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. எத்தனை கட்டடங்கள் உள்ளன என்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

 ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப் பேரவையின் ஏ பிளாக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடியும் தறுவாயில் உள்ளன. இப்போது, சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறுவதால் பணிகளில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும் என அவர்கள்  தெரிவிக்கின்றனர்.

 அரசினர் தோட்டத்தில் ரூ.450 கோடி செலவில் ஏ பிளாக் கட்டடம் கட்டடப்பட்டுள்ளது. கட்டடத்தின் உள் அலங்காரப் பணிகளும், சட்டப் பேரவையின் மேற் கூரையில் குவி மாடம் அமைக்கும் பணிகளும் முழுமையாகத் தொடங்கப்படவில்லை.

 இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியது: குவி மாடத்தை அமைக்க மிகவும் கவனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அருகில் கடற்கரை இருப்பதால் துருப்பிடிக்காத உருக்கைப் பயன்படுத்துவது அவசியமாகிறது. இந்த மாதத்துக்குப் பிறகே அதற்கான பணிகள் தொடங்கும். தாற்காலிக குவி மாடம் இப்போது அமைக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெறும் வரை அது அங்கேயே இருக்கும். இதற்கென தனியாக வாடகைக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்றார்.

 சட்டப் பேரவைச் செயலகம்: சட்டப் பேரவையின் ஏ பிளாக் கட்டடம் நவம்பருக்குள் முடியும் சூழலில், முதலில் சட்டப் பேரவைச் செயலகம் பழைய சட்டப் பேரவையில் இருந்து இடம் மாறுகிறது. சட்டப் பேரவைக் கூட்டத்துக்காக புதிய சட்டப் பேரவையில் தாற்காலிகமாகச் செயலகம் செயல்பட்டு வருகிறது. ஏ பிளாக் பணிகள் முடிந்த பிறகு அங்கு முழுமையாக இடம் பெயரும்.

சட்டப் பேரவைச் செயலகம் இடம் மாறும் பட்சத்தில், பழைய சட்டப் பேரவைக் கட்டடத்தில் அலுவலக அறைகள் காலியாகும். இந்தக் கட்டடத்தை தமிழக அரசு தொல்லியல் துறையிடம் ஒப்படைக்குமா அல்லது அரசே தொடர்ந்து தன் வசம் வைத்திருக்குமா என்ற கேள்வி இருந்து வந்தது.

 இந்த நிலையில், சென்னையில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் அரசுத் துறைகளின் அலுவலகங்களை பழைய தலைமைச் செயலகத்துக்கு மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக, எத்தனை அரசு அலுவலகங்கள் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன என்ற கணக்கெடுப்பை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடம் மாறிய அலுவலகங்கள்: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்டு வந்த சி.பி.சி.ஐ.டி. அலுவலகம், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியன இப்போது அண்ணாநகர், கிண்டி, நுங்கம்பாக்கம் என பல்வேறு இடங்களில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வாடகையாக மட்டும் ஒவ்வொரு அரசுத் துறையும் பல லட்ச ரூபாயை அளிக்கின்றன. இதனால், அரசுக்கு ஏற்படும் இழப்பைக் குறைக்க வாடகைக் கட்டடங்களில் இயங்கும் அரசுத் துறைகளை பழைய தலைமைச் செயலகத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.