இலவசப் பட்டா ஏக்கத்தில் ஏழைகள்; ஆக்கிரமிப்பில் அரசு நிலங்கள்!

திருப்பூர்: தனியார் ஆக்கிரமிப்புகளில் உள்ள அரசு நிலங்களை மீட்க வருவாய்த் துறையினர் முழு முயற்சி மேற்கொள்ளாததால் இலவசப் பட்டா கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பரிதவிப்பதோடு, வளர்ச்சித் திட்டங
Updated on
2 min read

திருப்பூர்: தனியார் ஆக்கிரமிப்புகளில் உள்ள அரசு நிலங்களை மீட்க வருவாய்த் துறையினர் முழு முயற்சி மேற்கொள்ளாததால் இலவசப் பட்டா கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பரிதவிப்பதோடு, வளர்ச்சித் திட்டங்களிலும் தொய்வு ஏற்பட்டுவருகிறது.

அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்க 2006-ல் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை பின்னர் 5 ஆண்டுகளாகக் குறைத்து இப்போது 3 ஆண்டுகள் இருந்தாலேயே இலவச பட்டா வழங்கலாம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், 2011 டிசம்பர் 31ம் தேதி இந்தத் திட்டத்துக்கு இறுதிவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் இலவசப் பட்டா வழங்க வேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் காத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அந்தக் குடும்பங்களுக்கு இலவசப் பட்டா வழங்காமல் இழுத்தடிக்கிறது வருவாய்த்துறை.

திருப்பூர் பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தகுதியான நிலங்கள் இல்லை என்றும், நீர்நிலை புறம்போக்கு, வண்டிப்பாதை புறம்போக்கு உள்ளிட்ட ஆட்சேபனைக்குரிய நிலங்களாக இருப்பதாலும் அந் நிலங்களுக்கு இலவசப் பட்டா வழங்க முடியவில்லை என்றும் காரணம் தெரிவிக்கப்படுகிறது. இதனால், தகுதியுடைய ஏழைக் குடும்பத்தினர் இலவசப் பட்டா கிடைக்காமல் பரிதவிக்கின்றனர்.

இதற்கிடையில், திருப்பூர் பேரவை தொகுதிக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள் முறை கேடாக தனியார் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அந் நிலத்தை மீட்டு தகுதியுடைய ஏழைக் குடும்பங்களுக்கு இலவசப் பட்டா வழங்குவதில் வருவாய்த்துறையினர் தொடர்ந்து தாமதித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் ஒன்றியம் நெருப்பெரிச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 40  ஏக்கர் அரசு நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. 1960ம் ஆண்டில் அந் நிலத்தில் விவசாயம் செய்ய நிபந்தனை அடிப்படையில் 15 ஏழைக் குடும்பங்களுக்கு அரசு பட்டா வழங்கியது. பிற்காலத்தில் அரசு திட்டங்களுக்கு தேவைப்படும்போது அந்நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், அதுவரை அந் நிலங்களில் விவசாயம் மட்டுமே செய்துகொள்ளலாம் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.

ஆனால், விதிமுறையை மீறி அந்நிலத்தை பெரும்பாலான பயனாளிகள் வேறு நபர்களுக்கு கிரையம் செய்துவிட்டனர். அந் நிலத்தில் ஒரு ஏக்கர் நிலத்தை அருகிலுள்ள தனியார் நில உரிமையாளர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலியும் அமைத்துள்ளார். அதன்படி, தனியார் ஆக்கிரமிப்பிலும், விதிமுறைகள் மீறப்பட்டு பட்டாக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையிலும் சுமார் 25 ஏக்கர் தரிசு நிலங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அந்த நிலங்களை உடனடியாக மீட்டு அரசுத்துறை அலுவலகங்கள் அமைக்கவோ அல்லது வீடில்லாத ஏழைக் குடும்பங்களுக்கு இலவசப் பட்டா வழங்கவோ பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், நெருப்பெரிச்சல் ஊராட்சித் தலைவர் பி. பாலன் தலைமையில் போராட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ஊராட்சித் தலைவர் கூறுகையில், புதிய மாவட்டம் துவங்கப்பட்ட நிலையில் அரசுத்துறை அலுவலகங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தகுதியான நிலங்களைத் தேடி அலைந்துகொண்டுள்ளனர். இலவசப் பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கும் நிலங்கள் வழங்க முடியாமல் திட்டம் கிடப்பில் போட்டுள்ளது.

ஆனால், நெருப்பெரிச்சல் ஊராட்சியில் உள்ளதுபோல் திருப்பூரில் ஏராளமான அரசு நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந் நிலங்களைக் கண்டறிந்து மீட்க தொடர்ந்து இழுபறி செய்யப்படுவதால் வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்வதில் தொய்வு நீடிக்கிறது. உடனடியாக, தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள

நிலங்களை மீட்டு அரசுத்துறை அலுவலகங்கள் அமைக்கவோ அல்லது விண்ணப்பித்த ஏழைக் குடும்பங்களுக்கு இலவசப் பட்டா கிடைக்கவோ வழிவகை செய்ய வேண்டும் என்றார். நடவடிக்கை எடுக்குமா அரசு?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com