2 ஆண்டுகளாக ஊதியமின்றி கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள்

திருச்சி: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியமின்றி வேலை பார்த்து வருகின்றனர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள்.  கூட்டுறவு அமைப்புகளின் மூலம் வீடு கட்டுவதற்கு கடன் வழ
Updated on
2 min read

திருச்சி: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியமின்றி வேலை பார்த்து வருகின்றனர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள்.

 கூட்டுறவு அமைப்புகளின் மூலம் வீடு கட்டுவதற்கு கடன் வழங்கும் (பெரும் பகுதி மானியம்!) அமைப்புகளாக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இப்போது தமிழ்நாட்டில் 715 நகரக் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களும், 410 தாலுகா கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களும் செயல்பட்டு வருகின்றன.

 மொத்தத்தில் இந்தச் சங்கங்களில் 2,975 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 1,025 பேருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. இத்தோடு முடியுமா என்றால், மீதமுள்ளவர்களுக்கும் வெகுவிரைவில் ஊதியம் நின்று போகலாம் என்ற அச்சமும் இருக்கிறது.

 காரணம் என்ன என்று விசாரித்தபோது கூட்டுறவு வட்டாரங்கள் கூறியவை: இப்போதெல்லாம் ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் வட்டி, அபராத வட்டி, ஏன் முழுக் கடனும்கூட தள்ளுபடி செய்யப்படுகிறது.

 அந்த வகையில், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் கடன் வாங்கியவர்களுக்கு 2003-ல் அபராத வட்டித் தள்ளுபடி செய்யப்பட்டது ரூ. 400 கோடி. அதன்பிறகு, 2005-ல் தள்ளுபடி ரூ. 700 கோடி. அதைத் தொடர்ந்து 2008-ல் அபராத வட்டித் தள்ளுபடி, வட்டிக் குறைப்பு என்ற சலுகைகள் ரூ. 600 கோடி.

 மொத்தத்தில் இதுவரை ரூ. 1700 கோடி சலுகையாக வீடு கட்டியவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு வந்திருக்க வேண்டிய தொகை. அரசு சலுகை அளிக்குமானால், இதனால் கூட்டுறவு வீடு கட்டும் சங்கங்களுக்கு ஏற்படும் இழப்பை அரசுதான் ஈடுகட்டியிருக்க வேண்டும்.

 இதுவரை ஒரு பைசாகூட அரசு இந்த இழப்புகளுக்கு வழங்கவில்லை என்பதுதான் இப்போதுள்ள பிரச்னையே. இத்தோடு நின்றுவிடுமா என்ன? தள்ளுபடி "தொழில்நுட்பங்களைப் புரிந்து' கொண்ட மக்கள் அசல் தொகையைச் செலுத்தவே சங்கங்களுக்கு வருவதில்லை.

 மொத்தத்தில் சங்கங்கள் செயல்படுவது முற்றிலும் முடங்கிவிட்டது. புதிய கடன் கொடுக்க வழியில்லை என்பது ஒருபுறம், பணியாற்றும் ஊழியர்களுக்கே ஊதியம் வழங்க முடியவில்லை என்பது மறுபுறம். இந்த நிலையில், எப்படி சங்கங்களை நடத்துவது?

 இதற்கிடையே, 2010-ல் அபராத வட்டித் தள்ளுபடி, வட்டியில் ரூ. ஒரு லட்சம் கடன் என்றால் 50 சதவீதமும், ரூ. 2 லட்சம் தள்ளுபடி என்றால் 25 சதவீதமும், ரூ. 2 லட்சத்துக்கும் மேல் தள்ளுபடி என்றால் 10 சதவீதமும் தள்ளுபடி. இது எவ்வளவு வருமானத்தைப் பாதிக்கும் என்று தெரியவில்லை.

 இதுதொடர்பாக திருச்சி மண்டல கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலர் டி. ஞானகுரு கூறியது:

 "கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சுமை அதிகரித்து தொடக்க நிலையில் தாலுகா கூட்டுறவு வீட்டு வசதிச் சங்கங்களின் ஊழியர்கள் 1025 பேருக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. இந்த நிலை விரைவில் நகரக் கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஊழியர்களுக்கும் வரலாம்.

 முற்றிலும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களே கலைக்கப்படும் சூழலுக்கும் தள்ளப்படலாம்.

 இதைக் கண்டித்தும், விரைவில் அரசு சலுகை அளிக்கப்பட்ட தொகையை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களுக்கு வழங்க வலியுறுத்தியும் மாநிலம் முழுவதும் போராடி வருகிறோம்.

 கடந்த 2-ம் தேதி வேலூரில் தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம், 4-ம் தேதி கோவையிலும், 8-ம் தேதி திருச்சி, தஞ்சையிலும் நடைபெறவுள்ளன.

 ஊதியம் கிடைக்காததால், காலை, மாலை வேளைகளில் வேறு கூடுதல் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அத்தோடு மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளாக புதிய கடன்களும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உண்மையில் கடன் தேவைப்படுவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்கிறார் ஞானகுரு.

 அரசியலுக்காக, வாக்குகளைப் பெறுவதற்காக எந்தச் சலுகையை வேண்டுமானாலும் அரசியல்வாதிகள் அறிவித்து- அமல்படுத்திவிட்டுப் போகட்டும். அதேநேரத்தில், அந்த அறிவிப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, மொத்தமாகக் கடன் வழங்கும் திட்டத்தையே, அதற்கான அமைப்புகளையே மூடிவிடும்படியாகவும் இருக்கக் கூடாது. ஏற்கெனவே இந்தத் திட்டங்களைப் புதுப்பிக்க வேண்டும், கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என ஏராளமான கோரிக்கைகள் கிடப்பில் கிடக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com