/

அரசு ஆவணக் காப்பகத்தில் டிஜிட்டல் மயமாகி வரும் பேரவை உரைகள்

சென்னை, ஜன. 17: சட்டப் பேரவை உரைகள் அனைத்தும் அரசின் ஆவணக் காப்பகத்தில் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. ஆனால், இந்த வசதியை சட்டப் பேரவைச் செயலகம் இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை.  சட்டப் பேரவையின் முதல்

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 1:02 pm

கே.பாலசுப்பிரமணியன்

சென்னை, ஜன. 17: சட்டப் பேரவை உரைகள் அனைத்தும் அரசின் ஆவணக் காப்பகத்தில் டிஜிட்டல் மயமாகி வருகின்றன. ஆனால், இந்த வசதியை சட்டப் பேரவைச் செயலகம் இதுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

 சட்டப் பேரவையின் முதல் கூட்டம் 1952-ல் தொடங்கியது. இன்று 13-வது சட்டப் பேரவையின் 15-வது கூட்டத் தொடர் வரை நடைபெற்று முடிந்துள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் என அனைவர் பேசுவதும் பேரவை நிருபர்களால் அப்படியே குறிப்பு எடுக்கப்படும். அவை அச்சிடப்பட்டு புத்தகங்களாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

 இந்தப் புத்தகங்கள் அதிக பக்கங்களுடன் (ஒவ்வொரு கூட்டத் தொடர் வாரியாக) வெறும் 3-க்கு மட்டுமே விற்கப்படுகின்றன. அரசு அச்சகத்தில் அச்சிடப்படும் இந்தப் புத்தகங்கள் எழுது பொருள் அச்சகம், அரசு ஆவணக் காப்பகம், சட்டப் பேரவை நூலகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

 ஆவணக் காப்பகத்தில் பணி: இந்த நிலையில், சட்டப் பேரவை நடவடிக்கை புத்தகங்கள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 மத்திய-மாநில அரசுகளின் நிதியுதவியுடன் இந்தப் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு நிறுவனமான "எல்காட்' பணியாளர்கள் மூலம் பேரவை நடவடிக்கை புத்தகங்கள் அனைத்தும் "ஸ்கேன்' செய்யப்படுகின்றன.

 ""அனைத்துப் பக்கங்களையும் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்வோம். அரசுத் துறையினர் யாரேனும் கேட்டால் அவற்றை அப்படியே அளித்து விடுவோம். பணிகளை முடிக்க காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை'' என்று ஆவணக் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தனிப் பாதையில் சட்டப் பேரவைச் செயலகம்: சட்டப் பேரவை உரைகளை டிஜிட்டல் மயமாக்கும் பணியில் ஆவணக் காப்பகம் ஒருபுறம் ஈடுபட்டுக் கொண்டிருக்க, சட்டப் பேரவைச் செயலகம் தனிப் பாதையில் நடைபோட்டு வருகிறது.

 பேரவையின் உரைகள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்கும் பணியை மேற்கொள்ள பேரவை துணைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

 இந்தக் குழுவின் சார்பில் சில ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டாலும் இதுவரை எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இதனால், சட்டப் பேரவையில் அறிஞர் பெருமக்கள் பலரும் ஆற்றிய உரையை எளிதாகப் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 என்ன செய்யலாம்? ஆவணக் காப்பகத்தில் பேரவை நடவடிக்கைப் புத்தகங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு முடித்திருந்தால் அதை அப்படியே கேட்டுப் பெற்று பேரவைச் செயலக இணையதளத்தில் வெளியிடலாம். இரண்டுமே தமிழக அரசின் துறைகள் என்பதால் அதில் எந்தச் சிக்கலும் இருக்காது என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.