

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப்பகுதியில் அங்கன்வாடி மையங்கள் இல்லாததால், சத்தான உணவு கிடைக்காமல், கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பர்கூர் மேற்கு மலைப்பகுதிக்கு உள்பட்ட தாமரைக்கரையிலிருந்து, மணியாச்சி பள்ளம் வழியாக பட்டேபாளையம் செல்லும் வழியில் 20 மலைக் கிராமங்கள் உள்ளன. இவற்றில் சுமார் 6 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
÷தாமரைக்கரையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தாளகரை என்ற இடத்தில் மட்டும் ஒரு அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. தாளகரையில் இருந்து பட்டேபாளையம் வரை, 25 கி.மீ. தூரத்துக்கு 15 மலைக் கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1,000 குழந்தைகள் இருப்பதாக தன்னார்வ அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக் கிராமங்களில், வளர் இளம் பெண்களில் பெரும்பாலானோர் ரத்தசோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், மலைக் கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவு கிடைப்பதில்லை. பல மலைக் கிராமங்களில் பள்ளிகள் அமைந்திருந்தாலும், குழந்தைகள் பள்ளி செல்லத் தயங்குகின்றன. அடிப்படைக் கல்வி குறித்தும், சுகாதாரம் குறித்தும் இப்பகுதியினருக்கு விழிப்புணர்வு அதிகமில்லை.
கர்ப்பிணிப் பெண்களுக்கு சத்துணவு கொடுக்கவும், 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு உணவு அளித்து, அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொடுப்பதுமே அங்கன்வாடி மையங்களின் முதன்மையான நோக்கமாகும்.
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் தற்போது 14 லட்சம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2009-10 நிதியாண்டு புள்ளிவிபரப்படி, தமிழகத்தில் மட்டும் 54,439 மையங்கள் செயல்படுகின்றன.
ஈரோடு மாவட்டத்தில் 2,080 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. நகரங்களில் 400 முதல் 800 பேர் வசிக்கும் பகுதிகளிலும், கிராமங்களில் 300 முதல் 800 பேர் வரை வசிக்கும் பகுதிகளிலும், மலைப் பகுதிகளில் 150 முதல் 400 பேர் வரை வசிக்கும் பகுதிகளிலும் மையம் தொடங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
÷இதன்படி சமவெளிப் பகுதியில் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டாலும், மலைக் கிராமங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன. கடந்த 2001-ல் மகப்பேறின்போது இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1,000-க்கு 49 ஆக இருந்தது. இது 2008-ல் 31-ஆகக் குறைக்கப்பட்டது. இந்த விகிதத்தை 20-ஆகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த இலக்கை எட்டும் வகையில், தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2010-ம் ஆண்டு வரை 11,762 அங்கன்வாடி மையங்கள் புதிதாகத் துவக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த திட்டத்தின் நோக்கம் மலைக் கிராம மக்களைச் சென்றடையவில்லை.
கருவுற்ற பெண்களுக்கு நல்ல, சத்து நிறைந்த உணவு கிடைக்கும்போதுதான், குழந்தைகள் நலமாக இருக்கும். நாட்டின் எதிர்காலச் சந்ததியினர், நல்ல உணவு கிடைக்காமலும், நோயின் பிடியிலும் தவிக்கும் நிலை மலைக் கிராமங்களில் தொடர்கிறது.
பர்கூர் மேற்கு மலைக் கிராமங்களில் புதிதாக அங்கன்வாடி மையங்களைத் திறப்பதன் மூலம், இங்குள்ள கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல்நலம் மேம்படுவதோடு, மலைக் கிராமங்களைச் சேர்ந்த படித்த சிலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
எனவே, மாவட்ட நிர்வாகம் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு, பர்கூர் மேற்கு மலைப் பகுதியில் குறைந்தபட்சம் 10 அங்கன்வாடி மையங்களைத் தொடங்க முன்வர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.