கோடை என்றாலே குளிர்ச்சியான இடங்களையும், குளியலுக்கான இடங்களையும் தேடி மக்கள் முற்றுகையிடுவது வாடிக்கை. "இந்தியாவின் நயாகரா' என்ற பெயருடன் புகழ் பெற்று விளங்கும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் தாயாகவும், தருமபுரி மாவட்டத்தின் இதயமாகவும் விளங்கும் காவிரிப் படுகையே இந்த நீர்வீழ்ச்சி. தருமபுரியில் இருந்து 46 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் வனப் பகுதிக்கு இடையே கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியாகி வரும் காவிரியாற்று நீர் ஒகேனக்கல் பகுதியில் 20 மீ. உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியாக விழுகிறது.
தங்குமிடத்தில் உடைமைகளை வைத்துவிட்டு நடந்து சென்றே அனைத்து இடங்களையும் பார்வையிடலாம். சிறுவர்கள் விளையாடுவதற்காகவும், முதியோர்கள் இதமான காற்றை அனுபவித்து ஓய்வெடுக்கவும் பூங்காக்கள் உள்ளன.
தொங்கு பாலம்: இளைஞர்கள், இளம்பெண்கள் குளித்து மகிழ சினிபால்ஸ், மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஞானதீர்த்தம் ஆகிய இடங்கள் உள்ளன. இவற்றுக்குச் செல்ல வேண்டுமெனில் தொங்கு பாலத்தைக் கடந்து செல்ல வேண்டும்.
தொங்கு பாலத்தில் இருந்து நீர்வீழ்ச்சிகளையும், பரிசல்களில் செல்வோரையும் பார்ப்பது பரவசத்தை ஏற்படுத்தும். நீர்வீழ்ச்சிகளில் இருந்து கொட்டும் நீர் வெண்புகையாகக் காண்பது சிறப்பாகும். தொங்கு பாலத்தில் செல்ல கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.5, சிறியவர்களுக்கு ரூ.3 வசூலிக்கப்படுகிறது.
சினிபால்ஸ் அருவியில் குளிக்க ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டும்.
மசாஜ்: கூட்டமாக இருப்பதால், அருவிகளில் குளிக்க விரும்பாதவர்கள், அருவியிலிருந்து விழுந்து ஆற்றுப் பெருக்கெடுத்து செல்லும் இடங்களில் ஆங்காங்கே ஆயில் மசாஜ் செய்து குளிக்கின்றனர். மசாஜ் செய்ய ரூ.50 வசூலிக்கப்படுகிறது. சிறப்பு பயிற்சி பெற்ற மசாஜ் தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகமே அங்கீகரித்து அடையாள அட்டை வழங்கியுள்ளது. ஸ்பெஷல் மசாஜ் கட்டணம் ரூ.100.
பரிசல் வசதி: தண்ணீரில் மிதந்தபடி அனைத்து அருவிகளையும் பார்த்து ரசிக்க பரிசல் வசதியும் உள்ளது. ஒரு பரிசலில் 6 நபர்கள் செல்லலாம். ஒருவருக்கு ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பாதுகாப்பு கவச உடை அணிந்தே பரிசலில் செல்ல வேண்டும்.
மீன் உணவு: பார்த்து, குளித்து, குதூகலித்து வந்தவுடன் மணத்துடன் தயாராக இருக்கிறது மீன் உணவு. குளிப்பதற்கு செல்வதற்கு முன்பாக மார்க்கெட்டில் நாமே விரும்பிய மீன்களை கிலோ கணக்கில் எடுத்துக் கொடுத்தால் சமைத்து தர பெண் தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
மீன் மட்டுமல்லாது உணவும் தயார் செய்து தருகின்றனர். சாப்பாடு, மீன் குழம்பு, மீன் வறுவல், ரசம், மோர் என ஒரு பிடி, பிடிக்கலாம். நபர் ஒருவருக்கு ரூ.75 முதல் ரூ.100 வரை வசூலிக்கின்றனர்.
மீன் காட்சியகம், முதலைப் பண்ணை: இங்கு மீன் காட்சியகமும், முதலைப் பண்ணையும் உள்ளன. நபர் ஒருவருக்கு ரூ.1 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கும்பல் என்றாலே அலர்ஜி என நினைக்கும் நபர்கள் தனியாக, நிம்மதியாக குளிக்க அருவிப் பகுதியிலிருந்து சில கி.மீ. தூரம் கடந்து சாலையோரம் ஆற்றங்கரையில் ஆங்காங்கே இறங்கி குளித்துச் செல்கின்றனர். சிறுவர்களும் இந்தப் பகுதிகளில் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர்.
பேருந்து, விடுதி வசதி: தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து ஒகேனக்கல்லுக்கு தனியார், அரசுப் பேருந்துகள் உள்ளன. அதிகாலை தொடங்கி இரவு வரையிலும் பேருந்து வசதியுள்ளது.
பயணிகள் தங்குவதற்கு தனியார் லாட்ஜ், ஹோட்டல், விடுதிகள் ஏராளமாக உள்ளன. இவை தவிர சத்திரம், மடங்களும் உள்ளன. அவரவர் வசதிக்கு தகுந்தபடி தங்குமிடத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். தமிழ்நாடு ஹோட்டலில் குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய அறைகளும் உள்ளன.
ஒகேனக்கல்லுக்கு வந்தால் கண்களுக்கும், வயிற்றுக்கும் விருந்து கிடைப்பது மட்டுமல்லாது, மசாஜ் குளியல் மூலம் உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைப்பதை உணரலாம்.
இதனால், தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டவரும் உல்லாசமாகப் பொழுதைக் களிக்கும் சிறந்த சுற்றுலாத் தலமாக ஒகேனக்கல் ஆகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!
ஜனநாயகக் கடமையாற்றிய திரை பிரபலங்கள்!

அரசியலுக்கு வந்தால் விமர்சனங்கள் இருக்கும்! வாக்களித்த பிறகு சிம்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


