டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தங்க நாணயத்துக்காக ரூ. 4 கோடியை திரும்ப வசூலிக்க உத்தரவு

திருவொற்றியூர், மே 26: சென்னைத் துறைமுகத்தின் 125-வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது ஊழியர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட தங்க நாணயங்களின் மதிப்பு தொகையான ரூ. 4 கோடியை திரும்ப வசூலிக்கும் உத்தரவை மத்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:49 am

முகவை க.சிவக்குமார்

திருவொற்றியூர், மே 26: சென்னைத் துறைமுகத்தின் 125-வது ஆண்டு கொண்டாட்டத்தின் போது ஊழியர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கப்பட்ட தங்க நாணயங்களின் மதிப்பு தொகையான ரூ. 4 கோடியை திரும்ப வசூலிக்கும் உத்தரவை மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தாற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னை துறைமுகம் 1881-ல் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்டது. 2007-ல் இதன் 125-வது ஆண்டு விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்போது துறைமுக ஊழியர்களுக்கு தலா 5 கிராம் தங்க நாணயமும், கைக்கடிகாரமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதற்கான விழா ஜனவரி 17, 2007-ல் நடைபெற்றது. அன்றைய மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற விழாவில் அப்போது முதல்வராக இருந்த மு.கருணாநிதி, அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற துறைமுக ஆண்டு விழாக்களுக்கு ஆடம்பரமாகச் செலவு செய்யப்படுவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்திருந்தனர்.

43 கிலோ தங்க நாணயங்கள்: துறைமுக ஊழியர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு வழங்குவதற்காக 8,680 தங்க நாணயங்கள் மத்திய உலோகங்கள் துறையிலிருந்து வாங்கப்பட்டன. மொத்தம் 43 கிலோ எடையுள்ள இந்த தங்க நாணயங்கள், துறை வாரியாக ஊழியர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

இதற்கான செலவுகள் குறித்து கணக்குத் தணிக்கைத் துறை ஆட்சேபம் தெரிவித்தது. பெருந்துறைமுக வழிகாட்டி விதிகளின்படி சுமார் ரூ.3 ஆயிரம் வரைதான் எந்தவித அன்பளிப்பையும் வழங்க முடியும். எனவே விதிகளுக்கு மாறாகச் செலவு செய்யப்பட்டுள்ள தொகையை மீண்டும் ஊழியர்களிடம் வசூலிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கப்பல் துறை ஆணை: இதனையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதியன்று மத்திய கப்பல்துறை மூலம் சென்னைத் துறைமுக நிர்வாகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி விரைவில் இத்தொகையை சம்பளத்திலோ அல்லது பணி ஓய்வு பெற்றிருந்தால் ஒய்வூதியத்திலிருந்தோ பிடித்தம் செய்ய அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்து.

இந்த உத்தரவின் அடிப்படையில் மே மாத சம்பளத்தில் ஒவ்வொரு ஊழியர் சம்பளத்திலும் ரூ.4,567 வீதம் பிடித்தம் செய்யப்படும் என கடந்த மே 17-ல் துறைமுக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியது. இது ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலையிட்டதை அடுத்து பிடித்தம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நினைவுப் பரிசை திரும்பப் பெற முடியுமா? இப்பிரச்னை குறித்து துறைமுக தொழிலாளர் சங்க நிர்வாகி ஆர்.சந்தானம் கூறியது:

ஆடம்பரமாகச் செலவு செய்யப்பட்ட விவரங்களைத் தருமாறு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தும் துறைமுக நிர்வாகம் அதனை அளிக்க மறுத்துவிட்டது. அன்பளிப்பாக வழங்கியதை 4 ஆண்டுகள் கழித்து சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஊழியர்களுக்கு வழங்கியது எல்லை மீறியது என்றால் கொண்டாட்டத்தின் போது செலவு செய்யப்பட்ட இதர செலவினங்களை யாரிடம் வசூலிப்பது. ஆடம்பரச் செலவினங்கள் குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களின் எதிர்ப்பால் பிடித்தம் செய்வது இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும் இது தாற்காலிகமானதே. எந்த நேரமும் மீண்டும் பிடித்தம் செய்ய முடியும். கப்பல் துறை பிறப்பித்த உத்தரவுகளைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் இந்த உத்தரவுக்கு நிரந்தர தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தை விரைவில் அணுக முடிவு செய்துள்ளோம் என்றார்.

125-வது ஆண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற போது சென்னைத் துறைமுகத் தலைவராக இருந்தவர் கே.சுரேஷ். இவரது வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தியபோது இவரது வீட்டில் சுமார் 5 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் தங்க நாணயங்களைக் கைப்பற்றியது. இது தொடர்பாக 2009-ல் இவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.