50 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டது கீழணை

சிதம்பரம், ஆக.1: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயும், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய அணையான கீழணை 50 ஆண்டுகளுக்குப் பிறகு, வறண்டு போய் காட்சியளிக்
50 ஆண்டுகளுக்குப் பிறகு வறண்டது கீழணை
Updated on
2 min read

சிதம்பரம், ஆக.1: கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகேயும், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், அணைக்கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய அணையான கீழணை 50 ஆண்டுகளுக்குப் பிறகு, வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் கடலூர், நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெருத்த கவலையடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்திலிருந்து கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து காவிரி நதி 149 மைல் கடந்து வந்து மேட்டூர் அணையை அடைகிறது. மீண்டும் காவிரி நதி மேட்டூரிலிருந்து 117 மைல் கடந்து வந்து கல்லணையை அடைகிறது.

மீண்டும் கல்லணையிலிருந்து 67 மைல்கள் கடந்து வந்து கீழணையை அடைகிறது. முடிவாக கீழணையிலிருந்து 33 மைல்கள் கடந்துபோய் வங்கக் கடலில் கடக்கிறது. வீணாக கடலில் கலக்கும் நீரை கதவணைகள் கட்டி தேக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணையின் மொத்தக் கொள்ளளவு 9 அடியாகும். 150.13 மில்லியன் கனஅடி நீர் தேக்கப்படுகிறது. இந்த அணையிலிருந்து உச்சக் கட்ட வெள்ளநீர் விநாடிக்கு 4.50 லட்சம் கனஅடி வெளியேற்றப்பட்டுள்ளது.கீழணை மூலம் கடலூர் மாவட்டத்தில் 1,01,910 ஏக்கரும், தஞ்சை மாவட்டத்தில் 1581 ஏக்கரும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22.408 ஏக்கரும், வேளாண் பாசனம் பெறுகிறது.காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுக்காவில் உள்ள விவசாயிகளின் மிகப்பெரிய நீர்ஆதாரமாக இந்த கீழணை திகழ்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கீழணை நீரின்றி தற்போது வறண்டு காட்சியளிக்கிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரியும் வறண்டு போய் உள்ளது.

சென்னைக்குக் குடிநீர் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போதிய நீóர் இல்லாததால் வேளாண் சாகுபடி மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் பெருத்த கவலைக்குள்ளாகியுள்ளனர்.

இது குறித்து கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாய சங்கத் தலைவரும், பாரதிய ஜனதா கட்சி விவசாய அணித் தலைவருமான காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்தது:ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ம் தேதி விவசாயப் பணிகளை தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் வரவில்லை.

ஆற்றுத் திருவிழாவான ஆடி 18-ஐ கொண்டாட கூட தண்ணீர் இல்லை. கீழணை வறண்டதால் இந்த ஆண்டு 1.50 லட்சம் டன் உணவு உற்பத்தி பாதிக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் 614 டிஎம்சி நீர் வீணாக சென்று கடலில் கலந்துள்ளது. கடலில் வீணாக கலக்கும் நீரைத் தேக்கி வைக்க கல்லணைக்கு கிழக்கே கொள்ளிடத்தில் 7 கதவணைகள் கட்ட வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.இவ்வாறு ஆண்டு முழுவதும் கீழணையில் நீரை தேக்கி வைத்து விவசாயிகளுக்கு வழங்கலாம். வீராணம் ஏரிக்கும் தொடர்ந்து தண்ணீர் அனுப்பலாம். இதன் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் இருபோக சாகுபடி மேற்கொள்ள முடியும்.

நிலத்தடி நீர் மட்டமும் உயரும். உப்புநீர் உட்புகாமல் இருக்கும். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com