விவசாயிகளுக்கு பயனளிக்காத வேளாண் சேவை மைய இயந்திரங்கள்!

கரூர்: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் வேளாண் சேவை மையம் அமைக்கும் திட்டம், உரிய திட்டமிடுதல் இல்லாததால் பயனற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில் நிலவும்
விவசாயிகளுக்கு பயனளிக்காத வேளாண் சேவை மைய இயந்திரங்கள்!
Updated on
2 min read

கரூர்: தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் வேளாண் சேவை மையம் அமைக்கும் திட்டம், உரிய திட்டமிடுதல் இல்லாததால் பயனற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயப் பணிகளுக்கு தொழிலாளர்கள் கிடைப்பதில் நிலவும் சிரமத்தைப் போக்கும் விதமாக, அரசு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

 விவசாயப் பணிகளில் தொழிலாளர் பற்றாக்குறையைப் போக்க 100 நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதற்கு இதுவரை சாதகமான பதில் இல்லை.

 விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் விவசாயப் பணிகள் முடங்கும் நிலை ஏற்படுள்ளதைத் தவிர்க்க, தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் வேளாண் கருவிகளை வாங்க அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களில் வேளாண் சேவை மையங்களை அமைத்து, வேளாண் இயந்திரங்களை வாங்கி விவசாயிகளுக்கு வங்கிகள் குறைந்த வாடகைக்கு கொடுக்கும். இதற்காக, இயந்திர மதிப்பில் 50 சத மானியத்தை அரசு வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்தச் சூழ்நிலையில், விவசாயப் பணிகளை இயந்திரமயமாக்கும் தமிழக அரசின் முயற்சி விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

 விவசாயப் பணிகளில் உரிய காலத்தில் நடவு, அறுவடைப் பணி மேற்கொள்வது மிகவும் அவசியம். இந்தப் பணிகள் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தாமதமாகும் பட்சத்தில் மகசூல் குறையும் வாய்ப்புள்ளது.

 இதனால், வேளாண் சேவை மையங்களில் நெல் நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரங்களை வாங்கினால், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் தடுமாறும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆனால், முதல்வர் அறிவித்துவிட்டார் என்பதற்காக வேளாண் சேவை மையங்களைத் தொடக்கி, டிராக்டர், களை எடுக்கும் இயந்திரம், மினி டிராக்டர் போன்றவை வாங்கப்பட்டுள்ளன.

 இப்போது, தமிழகத்தில் டிராக்டர்கள் இல்லாத கிராமங்களே இல்லை. இந்தச் சூழ்நிலையில், தெரிந்தே முதலீட்டை வீணடிக்கும் வகையில் டிராக்டர்கள் வாங்கி நிறுத்துவதால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும்.

 மேலும், களை எடுக்கும் இயந்திரம், கரும்பு கட்டை வெட்டும் இயந்திரங்களின் பயன்பாடும் மிகவும் குறைவு.

 விவசாயிகளுக்கு பயனளிக்காத இயந்திரங்களை வாங்கி அரசின் திட்டத்தையும், முதலீட்டையும் வீணடிப்பதைவிட, விவசாயிகளுக்கு பயன் அளிக்க கூடிய நெல் நடவு இயந்திரம், அறுவடை இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரம் ஆகியவற்றை வாங்கி இந்தத் திட்டத்தை செம்மையாகச் செயல்படுத்த வேண்டும். ஒரு சில மாவட்டங்களில் வேளாண் சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு உள்ள இயந்திரங்கள் பெரும்பாலானவை பயனற்ற நிலையிலேயே உள்ளன.

 இதுவரை வேளாண் சேவை மையங்களைத் தொடங்காத மாவட்டங்கள், நிதி நிலையில் ஓரளவு நல்ல நிலையில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் மட்டும் இந்த மையங்களைத் தொடங்க முன் வரவேண்டும். அரசு அதிகபட்சமாக ரூ. 20 லட்சம் மானியம் வழங்குகிறது. இதே அளவு தொகையை வங்கிகள் கொடுக்கும் பட்சத்தில், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட விவசாயப் பணிகளுக்கு உதவும் இயந்திரங்களை வாங்கிக்கொள்ள முடியும்.

 இதன்மூலம், விவசாயிகளுக்கு உதவுவதோடு, வங்கிகளுக்கு நிரந்தர வருமானம், இயந்திரங்களை இயக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.

 இதுகுறித்து தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com