பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் அவலம் மாறுமா?
பொள்ளாச்சி: மருத்துவர், செவிலியர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பற்றாக்குறை, போதுமான இடவசதி இன்மை போன்ற காரணங்களால், பெயரளவில் மட்டுமே மாவட்ட தலைமை மருத்துவமனையாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செயல்பட்டு


பொள்ளாச்சி: மருத்துவர், செவிலியர் மற்றும் துப்புரவுப் பணியாளர் பற்றாக்குறை, போதுமான இடவசதி இன்மை போன்ற காரணங்களால், பெயரளவில் மட்டுமே மாவட்ட தலைமை மருத்துவமனையாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை 1975ம் ஆண்டு துவங்கப்பட்டது. 144 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனைக்கு பொள்ளாச்சி நகரப் பகுதி, கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதால், திருப்பூரில் செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை மருத்துவமனைக்குப் பதிலாக, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கடந்த 2010ம் ஆண்டு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும், காது, மூக்கு, தொண்டை நிபுணர், இருதய சிகிச்சை நிபுணர், கதிரியக்க மருத்துவர் போன்ற மருத்துவர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. மேலும், 50 மருத்துவர்களுக்கு மேல் பணியாற்ற வேண்டிய இந்த மருத்துவமனையில் 24 மருத்துவர்களே உள்ளனர்.
தவிர, 74 செவிலியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 30 செவிலியர்களே உள்ளனர்; 14 துப்புரவு பணியாளர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 4 துப்புரவு பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இதனால் கிராமப் புறங்களில் இருந்து சிகிச்சை பெற வரும் ஏழை மக்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி அல்லது பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.
துப்புரவுப் பணியாளர் பற்றாக்குறையால் மருத்துவமனை வளாகம் தூய்மையின்றி, நோய்களை பரப்பும் இடமாக மாறி வருகிறது. இதனால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.
எனவே பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குத் தேவையான இடம் ஒதுக்கி, பற்றாக்குறையுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திறக்கப்படாத மகப்பேறு கட்டடம்
மகப்பேறு சிகிச்சைக்காக 2010ம் ஆண்டு, ரூ. 75 லட்சம் செலவில் 24 படுக்கைகள், அறுவை அரங்கு மற்றும் குளிர்சாதன வசதியுடன் கூடிய மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்புப் பகுதி கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டது.
இந்தக் கட்டடப் பணிகள் கடந்த 2012, ஜனவரி மாதம் முழுமையாக முடிந்தும், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மகப்பேறு சிகிச்சைக்காக வரும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
உடனடியாக, மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்புப் பகுதி கட்டடத்தைத் திறக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் இளங்கோவனிடம் கேட்டபோது அவர் கூறியது.
மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மகப்பேறுக்குப் பிந்தைய கவனிப்புப் பகுதி கட்டடம் திறப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் இக் கட்டடம் திறக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...