மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் புத்துயிர் பெறுமா?

கடலூர், ஜூலை 22: கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் அதல பாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. நிலத்தடி நீரின் தன்மையும் மாறிவிட்டது. எதிர்கால நீர் தேவை மற்றும் முக்கியத்துவத்தைக் கர
மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகள் புத்துயிர் பெறுமா?
Updated on
2 min read

கடலூர், ஜூலை 22: கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் அதல பாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. நிலத்தடி நீரின் தன்மையும் மாறிவிட்டது. எதிர்கால நீர் தேவை மற்றும் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, சிதிலம் அடைந்துள்ள மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளுக்கு புத்துயிர் கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 தமிழகத்தில் நிலத்தடி நீர் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. முன்னர் சுமார் 30 அடி ஆழத்தில் கிடைத்த தண்ணீர் தற்போது 300 அடி ஆழத்தில்கூட கிடைப்பதில்லை.

 கடலூர் மாவட்டத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்த ஆறுகள் வறண்டுவிட்டன. மழை காலத்தில் வரும் நீரைகூட சேமிக்க இயலாத நிலையில் ஆற்றின் மணல்களை சுரண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கம் ஒருபக்கம், சென்னை குடிநீருக்கான ராட்சத போர்கள் ஒருபக்கம், வீடு, வணிக வளாகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அமைக்கப்படும் ஆழ்குழாய் கிணறுகள் மறுபக்கம், இப்படியாக கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் அசுர வேகத்தில் உறிஞ்சப்படுகின்றன. இதன் காரணமாக கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் தன்மையை மாற்றி வருகிறது.

 இன்று தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் பட்ஜெட்டில் மாதாமாதம் தண்ணீருக்காக தனியாக நிதி ஒதுக்க வேண்டிய பரிதாப நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் காலத்தில் கடலூர் மாவட்ட மக்களின் நீர் தேவை கேள்விக்குறியாகி வருகிறது.

 2001-06}ல் அ.தி.மு.க. அரசு மழைநீர் சேமிப்புத் திட்டத்தை அமல்படுத்தியது. அரசு, தனியார் கட்டடங்கள், வீடுகளில் மழைநீர் சேமிப்புத் தொட்டி கட்டாயமாக்கப்பட்டது. புதிதாகக் கட்டப்படும் கட்டங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு அமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புகள் கட்டட அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

 ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் முழுவீச்சில் வீடுகள், வணிக வளாகம், நிறுவனங்கள், அரசுக் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தால் மழை நீர் சேமிக்கப்பட்டதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் எதிர்பார்த்த அளவைவிட உயர்ந்தது.

 இந்த மாவட்டத்தில் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இத்திட்டத்துக்கு எதிர்பார்த்ததைவிட அதிக பலன் கிடைத்தது. தொடர்ந்து வந்த ஆட்சியில் மழைநீர் சேமிப்புத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கட்டடங்களில் ஏற்படுத்தப்பட்ட மழை நீர் சேமிப்பு அமைப்புகள் பராமரிக்கப்படவில்லை. இதனால் மழை நீர் சேமிப்பு குழாய்கள் சிதிலம் அடைந்து மழை நீரை சேமிக்கும் சக்தியை இழந்தன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மீண்டும் குறைந்து வருகிறது.

 இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது: கடலூர் மாவட்டத்தில் அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரின் தன்மையை மாற்றி வருகிறது. சிமென்ட், தார்ச் சாலைகள், வீடுகளைச் சுற்றிலும் சிமென்ட் தரைகள் அமைக்கப்படுவதால் மழை நீர் வழிந்தோடி வீணாகக் கடலில் கலக்கிறது.

 மழை நீர் சேகரிப்பின் மூலம் கடல் நீர் உட்புகுவதை கூடுமானவரை தடுக்க முடியும். மேலும் மழைநீரைச் சேகரித்து குடிநீர் மற்றும் அன்றாட வீட்டு உபயோகத் தேவைகளுக்கும், கழிப்பறைகளிலும், சலவை மற்றும் குளியலுக்கும் கால்நடைகளுக்கு, நீர்ப்பாசனம் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தலாம். அதற்கான கட்டமைப்பு வசதிகளை பற்றி பொதுமக்களிடம் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

 நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. இதற்கு அனுமதி தரும் உள்ளாட்சி நிர்வாகங்கள், மழை நீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா என உறுதி செய்த பின் கட்டட அனுமதி தர வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்புகளை பாகுபாடு இன்றி முழுமையாக அகற்றி, ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரி ஆழப்படுத்தி மழை நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தற்போது பருவ மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் ஏற்கெனவே கட்டடங்களில் அமைக்கப்பட்டு பராமரிப்பு இல்லாமல் உள்ள மழை நீர் சேமிப்பு அமைப்புகளை சீர்செய்து மழையின்போது சாலைகளில் வீணாகும் நீரையும் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நிலத்தடி நீர் மேலாண்மை சட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ÷நகர்ப்புறங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் மற்றும் மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பயன்படும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை, மீண்டும் அமல்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com