கடலூர், மார்ச் 30: கடலூர் மாவட்டத்தில் இவ்வாண்டு கோடையில் பயிரிடப்பட்டுள்ள குறுகிய காலப் பயிர்கள், விவசாயிகளுக்கு நல்ல லாபம் ஈட்டுவதாக அமைந்துள்ளது.
÷கடலூர் மாவட்டத்தில் 96 ஆயிரம் விவசாய ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. 1.5 லட்சம் ஏக்கர் டெல்டா பாசனப் பகுதிகளும் உள்ளதால், கடலூர் மாவட்டத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை மற்றும் ஓரளவுக்கு தண்ணீர் தேவைப்படும் மணிலா உள்ளிட்ட பயிர்களும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
÷ஆனால் இந்த ஆண்டு புயலுக்குப் பிறகு, விவசாயத்தில் பெரிய மாற்றத்தை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். புயலுக்குப் பின் தலைவிரித்தாடும் மின்வெட்டு, வேலைக்கு ஆள்கள் பற்றாக்குறைக் காரணமாக, தண்ணீர் தேவை அதிகம் உள்ள பயிர்களைச் சாகுபடி செய்வதில், விவசாயிகளுக்குப் பெரும் தயக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக, வேளாண் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
÷விவசாயத்துக்கான மும்முனை மின்சாரம் கடலூர் மாவட்டத்தில் 3 மணி நேரமே வழங்கப்படுகிறது. அதுவும் தொடர்ச்சியாக இல்லை என்கிறார்கள் விவசாயிகள்.
÷புயல் பாதிப்பு மற்றும் மின் பற்றாக்குறைக் காரணமாக, தண்ணீர் தேவை குறைவான, குறுகியகால பயிர்களை நோக்கி விவசாயிகள் பயணிக்க தொடங்கி உள்ளனர்.
÷புயலால் கடலூரை அடுத்த நாணமேடு, உச்சிமேடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்தரி, மலர்ச் செடிகள், வெங்காயம் உள்ளிட்ட தோட்டக்லைப் பயிர்கள், நிலத்தில் ஏற்பட்ட உவர்த்தன்மை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டன.
÷இந்நிலையில் தண்ணீர் தேவை அதிகம் உள்ள நெல் பயிருக்கு சிலர் மாறினர். ஆனால் மின்வெட்டு அவர்களை பாடாய்படுத்தி விட்டது.
÷எனினும் எதிர்நீச்சல் எண்ணத்துடன், கடலூரை அடுத்த நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கோடையில் குறுகிய காலப் பயிர்களான கத்தரி, சம்பங்கி மலர், கோழிக் கொண்டை மலர், வெள்ளரிக்காய் போன்ற பயிர்களைப் பயிரிட்டவர்கள், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக நாணமேடு விவசாயி பாக்கியராஜ் தெரிவித்தார்.
÷நெல், கரும்பு பயிரிட்ட விவசாயிகளைவிட, மலர்ச் செடிகள், வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, மானாவாரி உளுந்து, மானாவாரி மணிலா, எள் போன்ற குறுகியகால கோடைப் பயிர்களைப் பயிரிட்டு உள்ள விவசாயிகள் சிரமமின்றி இருக்கிறார்கள்.
÷ஏனென்றால் ஜனவரிக்குப் பின் பயிரிடப்பட்ட குறுகியகால கோடைகாலப் பயிர்களுக்கு, தண்ணீர் தேவை பற்றி கவலை இல்லை. இதனால் மின்சாரம் பற்றிய சங்கடம் இல்லை. ÷இந்த ஆண்டு கோடைகாலப் பயிர்கள் நல்ல லாபம் அளித்து உள்ளன என்றும் பாக்கியராஜ் தெரிவித்தார்.
÷கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 ஆயிரம் ஏக்கரில் தர்ப்பூசணி, வெள்ளரியும், 15 ஆயிரம் ஏக்கரில் சம்பங்கி, காட்டுமல்லி, கோழிக்கொண்டை, கனகாம்பரம் போன்ற மலர்ச்செடிகளும் பயிரிடப்பட்டு இருப்பதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.
÷காட்டுமன்னார்கோவில், அறந்தாங்கி, சித்தமல்லி ஆகிய பகுதிகளில் தர்ப்பூசணியும், கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி பகுதிகளில் வெள்ளரியும் அதிகமாகப் பயிரிடப்பட்டு உள்ளன.
÷75 நாள் பயிரான வெள்ளரியில், எவ்வித செலவும், பராமரிப்பு மின்றிக் ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரத்துக்கு மேல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
÷கடலூர் பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள கத்தரிக்காய்க்கு தற்போது கிலோ ரூ. 25 வரை தோட்டத்திலேயே விலை கிடைக்கிறது.
÷இதனால் ஏக்கருக்கு ரூ. 80 ஆயிரம் வரை குறுகிய காலத்தில் லாபம் கிடைக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.
÷சம்பங்கி மலர்கள் தற்போது தோட்டத்திலேயே, கிலோ 50 வரை விற்பனை செய்யப் படுகிறது. சம்பங்கி மலரில் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1.5 லட்சமும், கோழிக் கொண்டையில் ஏக்கருக்கு 50 ஆயிரமும் லாபம் கிடைக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
÷கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் கீழே போய்க் கொண்டு இருக்கிறது. நாளொன்றுக்கு 3 மணி நேரம் என்ற நிச்சயமற்ற மின்சாரம், தண்ணீர் பற்றாக்குறை, வேளாண் வேலைகளுக்கு ஆள்கள் கிடைக்காமை போன்ற பிரச்னைகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அரசு உள்ளிட்ட யாருடைய தயவும் இன்றி, இயற்கை வழியில் குறுகிய காலப் பயிர்களைப் பயிரிட்டு, இனி நிம்மதியாக விவசாயம் செய்வதுதான் புத்திசாலித்தனம் என்கிறார்கள், விவரம் தெரிந்த விவசாயிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கள்ளா் சீரமைப்புப் பள்ளி ஆசிரியா்களுக்கு கலந்தாய்வு: புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

போலி கையொப்பம் விவகாரம்: காவல் துறை சிஐடி முன்பு மம்தா மருமகன் ஆஜா்






