புதிய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் ந
புதிய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் செயலாளராக உள்ள அவர், வரும் திங்கள்கிழமை (டிசம்பர் 31) தலைமைச் செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார்.

தலைமைச் செயலாளராக உள்ள தேவேந்திரநாத் சாரங்கி, வரும் திங்கள்கிழமை ஓய்வு பெறுகிறார். அன்றைய தினமே தலைமைச் செயலாளர் பொறுப்புகளை ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்கவுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியிட்டார்.

தமிழக அரசின் 41-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா பாலகிருஷ்ணன், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்த அவர், 1978-ம் ஆண்டு உதவி ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினார். வேளாண்மை மற்றும் உள்துறைகளின் சார்புச் செயலாளர், சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை ஆகியவற்றின் துணைச் செயலாளர் பொறுப்பையும் வகித்தார்.

முதல்வரின் செயலாளராக இருந்தவர்: கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்தார். இதன்பின், 2002-ம் ஆண்டு முதல் முதல்வரின் செயலாளராக பணியாற்றினார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முக்கியத்துவம் இல்லாத பதவியில் அமர்த்தப்பட்டார். 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில், சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றினார்.

ஐ.ஏ.எஸ். தம்பதி: புதிய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், 2014-ம் ஆண்டு மார்ச்சில் தனது ஐ.ஏ.எஸ். பணியை நிறைவு செய்கிறார். அதாவது, 15 மாதங்கள் வரையில் அவர் தலைமைச் செயலாளர் பொறுப்பை  வகிப்பார். புதிய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனின் கணவர் பாலகிருஷ்ணனும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார்.

மூன்றாவது பெண் தலைமைச் செயலாளர்
தமிழக அரசில் மூன்றாவது பெண் தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் 2002-ம் ஆண்டு டிசம்பரில் முதல் பெண் தலைமைச் செயலாளராக லட்சுமி பிரானேஷ் நியமிக்கப்பட்டார். அதன் பின், திமுக ஆட்சியில் 2010-ம் ஆண்டு மாலதி தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்த இருவரைத் தொடர்ந்து, மூன்றாவது பெண் தலைமைச் செயலாளர் என்ற பெருமையை ஷீலா பாலகிருஷ்ணன் பெற்றுள்ளார்.

இதன் மூலம், ஒரு மாநிலத்தின் முதல்வரும், தலைமைச் செயலாளரும் பெண்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ள நிலையில், மூன்றாவது பெண் தலைமைச் செயலாளராக ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com