ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

வேளாண் துறைக்கு ரூ.5,189 கோடி ஒதுக்கீடு

வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.5,189 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2013, 8:28 pm

வரும் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.5,189 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது, நடப்பு நிதியாண்டில் வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட ரூ.359 கோடி அதிகமாகும்.

பட்ஜெட்டில் வேளாண் துறையின் கீழ் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்புகள்:

கலப்பு விவசாயம் மற்றும் ஒருங்கிணைந்த விவசாயம் மூலம் உற்பத்தித் திறனை அதிகரித்தல், வேளாண் துறையில் உயர் தொழில்நுட்பம், வேளாண் சந்தைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவற்றின் மூலமாக வருவாயைப் பெருக்குவதற்கான உத்திகள் மேற்கொள்ளப்படும்.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான ஒதுக்கீடு ரூ.669 கோடி ஆகும். மேலும் இத்திட்டத்துக்காக தமிழக வரவு - செலவுத் திட்டத்தில் ரூ.700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

உழவர் பெருவிழா: வேளாண் விரிவாக்கப் பணிகளை மேலும் திறம்பட மேற்கொள்ள வரும் நிதியாண்டில் ரூ.46 கோடி செலவில் உழவர் பெருவிழா நடத்தப்படும்.

பயிர் உற்பத்தித் திறனை உயர்த்திட, மேலும் 5 லட்சம் ஏக்கர் நெல் சாகுபடிப் பரப்பு திருந்திய நெல் சாகுபடி முறையின் கீழ் கொண்டு வரப்படும்.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ரூ.24 கோடி செலவில் மானாவாரி நிலங்களின் உற்பத்தி நிலைப்படுத்தப்படும். 

பல்வேறு பயிர்களுக்கான தரமான விதைகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கு ரூ.161.62 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரங்கள், டி.ஏ.பி. பாஸ்பாட்டிக் உரங்கள் உரிய நேரத்தில் கிடைக்க தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு சுழல் நிதியாக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7.25 லட்சம் ஏக்கராக உள்ள காய்கறி சாகுபடிப் பரப்பை, வரும் ஆண்டில் 8.2 லட்சம் ஏக்கராக உயர்த்திட சிறப்பு கவனம் அளிக்கப்படும். வேளாண் விளைபொருள் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேமிப்பு வசதிகள், சந்தை நிலவரம் பற்றிய தகவல் பரிமாற்றம், உரிய போக்குவரத்து வசதிகள் இல்லாததால், விளைபொருள்களை விவசாயிகள் குறைந்த விலைக்கு விற்க நேரிடுகிறது.

இதனைத் தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட வேளாண் சந்தைகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அவற்றின் செயல்பாடு ஒருங்கிணைக்கப்படும்.  மேலும், எம்.சி.எக்ஸ் மற்றும் என்.சி.டெக்ஸ் போன்ற பொருள் சந்தைகளோடும் இவை இணைக்கப்படும்.  

சொட்டுநீர்ப் பாசனம் மூலமாக நீரைச் சேமித்துப் பயன்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.   பல்வேறு திட்டங்களின் நிதியை ஒருங்கிணைத்து, ரூ.520 கோடி செலவில் 1.30 லட்சம் ஏக்கர் பயிர்ப் பரப்பு நுண்ணீர்ப் பாசனத்தின் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர்ப் பாசனத் திட்டங்களுக்கான ஒரு ஏக்கர் நில உச்ச வரம்பு நீக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.