எதிர்க்கட்சியினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அரசு அனுமதி தர மறுப்பதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முதல்வர் ஜெயலலிதா மே 15-இல் சட்டப்பேரவையில் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றுக்குப் பதில் அளித்துப் பேசினார்.
அதில், சட்டம் ஒழுங்கைச் சீரழிக்கும் செயல்களில் எந்தக் கட்சி ஈடுபட்டாலும், அந்தக் கட்சியைத் தடை செய்ய இந்த அரசு தயங்காது. நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் கூறினார்.
காவல் துறையினர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குக்கூட அனுமதி மறுக்கின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடக்க இருந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய திருமாவளவனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மே 15-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்துக்காக விளம்பரத் தட்டிகள் வைத்திருந்தவர்கள் மீதெல்லாம் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னென்ன செய்தோம் என்பதையெல்லாம் மறந்துவிட்டுச் செயல்படுவது நல்லது இல்லை. ஆட்சி என்றைக்கும் நிரந்தரமில்லை. இதை தற்போதைய ஆட்சியாளர்கள் மறந்துவிட வேண்டாம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








