இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்கப்படுமா என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும். இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படாததால் காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
திமுக ஆட்சியில் மேட்டூர் அணை திறக்க தாமதம் ஆனாலும் சில நாள்களுக்குள் அணை திறக்கப்பட்டு சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்து வறண்டிருக்கும் நிலையில் குறுவை சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளிடம் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அணையின் நீர்மட்டம் 79 அடியாக இருந்தும் நீர்வரத்து இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடியின் பரப்பு வெகுவாகக் குறைந்தது. காவிரி வறண்டதால் இந்த ஆண்டு நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து விட்டது.
அண்டை மாநிலங்களோடு பேசி சுமுகமான முறையில் தேவையான நீரைப் பெறாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படுவது, எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது, மத்திய அரசின் மீது பழிபோட்டு தப்பித்துக் கொள்ள முயற்சிப்பது என்று அதிமுக அரசு செயல்படுவதால் தமிழக விவசாயிகள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
எதற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுவதால் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கர்நாடக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு தமிழகத்தில் சாகுபடி பொய்த்துப்போன அதிர்ச்சியில் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.
அவர்களில் சிலரது குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டது. அதுபோல, விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் முதல்வர் அறிவித்த நிவாரணத் தொகை முறையாக வழங்கப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன.
வறட்சி நிவாரணத் தொகையில் பயிர்க்கடன் வசூலிக்கக் கூடாது என அரசு அறிவித்தாலும், சில கூட்டுறவு வங்கிகளில் நிவாரணத் தொகை கொடுக்கும்போதே பயிர்க்கடன் வசூலிக்கப்படுகிறதாம். விவசாயிகளின் இந்தத் துயரங்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வுமான கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா, விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என கருணாநிதி கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குன்னூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

திமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது: குஷ்பு

துறைமுகம் தொகுதியில் அதிமுகவினா் டோக்கன் விநியோகம்: வழக்கு முடித்துவைப்பு
ஈரோடு கிழக்கு: தக்கவைக்கும் முனைப்பில் காங்கிரஸ்: ‘கை’ப்பற்றும் முனைப்பில் அதிமுக
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


