சேலத்தில் வெள்ளிக்கிழமை பாஜக மாநிலப் பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷை கொலை செய்தவர் என்று கருதப்படும் நபரின் வரைபடத்தை மாநகரக் காவல் துறை வெளியிட்டுள்ளது.
ஆடிட்டர் ரமேஷ் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மர்ம நபர்களால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்னதாக, ரமேஷை கொலை செய்ய வந்த கும்பலை மரவனேரி பகுதியைச் சேர்ந்த காவலாளி ஜெயராமன் (73) பார்த்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரிடம் அஸ்தம்பட்டி காவல் துறையினர் கடந்த 2 நாள்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யும் நோக்கத்தில் வந்த கும்பல், அந்தப் பகுதியில் இருந்த ஜெயராமனைக் கத்தி முனையில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தன்னை மிரட்டிய நபரின் அடையாளங்களை ஜெயராமன் காவல் துறையினரிடம் தெரிவித்தார். இதை வைத்து குற்றவாளி எனக் கருதப்படும் நபரின் வரைபடத்தை தயாரித்து காவல் துறை வெளியிட்டுள்ளது.
இந்த வரைபடத்தின் நகல் மாநகரில் உள்ள காவல் நிலையங்களுக்கும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, ஆடிட்டர் ரமேஷின் வீடு, அலுவலகப் பகுதிகளில் தடயங்கள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையிலான காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
இந்து முன்னணி மாநிலச் செயலர் வெள்ளையப்பன் கொலை குறித்து விசாரணை நடத்தும் வேலூர் சத்துவாச்சாரி காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு, சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
ஆடிட்டர் ரமேஷ் தனது செல்போன் மூலம் கடந்த ஒரு வாரத்தில் யார் யாரிடம் பேசினார், கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து சம்பவ நேரத்தில் எந்தெந்த செல்போன்களிலிருந்து அழைப்புகள் சென்றுள்ளன என்பது குறித்த விவரங்களையும் சேகரித்து காவல் துறை விசாரணை நடத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










