/

திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்கள் வெளியீடு: யுஜிசி கட்டுப்பாட்டில் கூடுதலாக 53 பல்கலைக்கழகங்கள்

பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

Updated On :24 டிசம்பர் 2013, 6:27 pm

பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் மத்திய அரசின் இசைவைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளும் அவற்றுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்கி வந்த 53 பல்கலைக்கழகங்களும் யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.

ஏற்கெனவே, கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் அவற்றுக்கு இணைப்பு வழங்கும் 550-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் யுஜிசி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏஐசிடிஇ அதிகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

அதில், ஏஐசிடிஇ சட்டம் 1987 பிரிவு 2(ஹெச்)-இன் படி, ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகள் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் என்ற வரையறைக்குள் வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இணைப்புக் கல்லூரிகள் அந்தந்த பல்கலைக்கழகம் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கட்டுப்பாட்டின் கீழ்தான் வரவேண்டும். எனவே,

யுஜிசி-தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான வரைவு வழிகாட்டுதல்களை யுஜிசி தயார் செய்து, அதன் ஜ்ஜ்ஜ்.ன்ஞ்ஸ்ரீ.ஹஸ்ரீ.ண்ய் என்ற  இணையதளத்தில்  வெளியிட்டு அதன் மீது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கடந்த 12-ஆம் தேதி வரை பெற்றது. இந்த கருத்துகளின் அடிப்படையில் வரைவு வழிகாட்டுதல்களில் தேவையான மாற்றங்களையும் மேற்கொண்டது.

இதற்கிடையே, ஏஐசிடிஇ-க்கு மீண்டும் அதிகாரம் கொடுக்க அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்ததைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களை வெளியிடுவதை யுஜிசி நிறுத்தி வைத்தது.

ஆனால், ஏஐசிடிஇ-க்கும் மீண்டும் அதிகாரம் கொடுக்கும் எண்ணத்தை மத்திய அரசு கைவிட்டதைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களை யுஜிசி அதன் இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி துணைத் தலைவர் தேவராஜ் தினமணிக்கு அளித்த பேட்டி:

உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் மத்திய அரசின் இசைவு காரணமாக நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளும், அவற்றுக்கு இணைப்பு அந்தஸ்து வழங்கி வரும் 53 பல்கலைக்கழகங்களும் யுஜிசி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன.

இதற்கான திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்கள் இப்போது யுஜிசி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது டிசம்பர் 30-ஆம் தேதி வரை கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்.

இந்த கருத்துகள் டிசம்பர் 31-ஆம் தேதி நடைபெறும் யுஜிசி துணைக் குழு கூட்டத்தில் வைக்கப்பட்டு, வழிகாட்டுதல்களில் தேவையான மாற்றங்கள் மீண்டும் செய்யப்படும்.

பின்னர், அந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் 2014 ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறும் யுஜிசி நிர்வாகக் குழு கூட்டத்தில் வைக்கப்பட்டு, பொறியியல் கல்லூரிகளுக்கான வழிகாட்டுதல்கள் இறுதி செய்யப்படும்.

இறுதி செய்யப்பட்ட வழிகாட்டுதல்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக ஒப்புதலுக்குப் பின்னர் 2014 ஜனவரி இறுதிக்குள் வெளியிடப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு விடும்.

எனவே கலை, அறிவியல் கல்லூரிகளைப் போல், பொறியியல் கல்லூரிகளும் தங்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் அந்தந்த பல்கலைக்கழகங்களிடம் மட்டுமே விண்ணப்பித்து பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்றார்.

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்படி, புதிய பொறியியல் கல்லூரி தொடங்க விண்ணப்ப நடைமுறைக் கட்டணமாக ரூ. 3 லட்சம் செலுத்த வேண்டும்.

பொறியியல் கல்லூரிகள் தனது கட்டுப்பாட்டில் வந்ததைத் தொடர்ந்து, அதற்கான திருத்தப்பட்ட வரைவு வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இதன்படி, பொறியியல் கல்லூரிகள் இனி தங்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திடம் மட்டும் விண்ணப்பித்தால் போதுமானது. பல்கலைக்கழகங்கள் தன்னிடம் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகள் குறித்த அறிக்கையை யுஜிசி-யிடம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

புதிய பொறியியல் கல்லூரி தொடங்குவதற்கு விண்ணப்ப நடைமுறைக் கட்டணமாக ரூ. 3 லட்சம் செலுத்த வேண்டும். சிறுபான்மை கல்லூரியாக இருந்தால் ரூ. 2 லட்சம் செலுத்த வேண்டும்.

 இவ்வாறு புதிய கல்லூரி தொடங்க விண்ணப்பிக்கும் அமைப்புக்கு ஒரு தனி குறியீட்டு எண்ணை பல்கலைக்கழகங்கள் வழங்கவேண்டும். இதுபோல் ஏற்கெனவே இயங்கி வரும் கல்லூரிகளும் தேவைகளுக்கு விண்ணப்பிக்கும்போது இந்த தனி குறியீட்டு எண்ணை பயன்படுத்தியே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகமே நிபுணர் குழுவை அமைத்து கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆய்வு நடத்தி, புதிய கல்லூரி தொடங்குவதற்கும், படிப்புகளைத் தொடங்குவதற்கும் அனுமதியை வழங்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.