கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

தூர்வாரப்படாத பாசன வாய்க்கால்!

சிதம்பரம் நகரின் கிழக்குப் பகுதியில், கொள்ளிடம் வடிநில கோட்டத்திற்குள்பட்ட கான்சாகிப் வாய்க்கால், ஆகாயத்தாமரைச் செடிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது.

News image
Updated On :9 ஜூன் 2013, 10:08 pm

சிதம்பரம் நகரின் கிழக்குப் பகுதியில், கொள்ளிடம் வடிநில கோட்டத்திற்குள்பட்ட கான்சாகிப் வாய்க்கால், ஆகாயத்தாமரைச் செடிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இக்கால்வாய் தூர்வாரப்படாத நிலையில், இவ்வாண்டு நல்ல மழை பெய்யும்பட்சத்தில், வழிந்தோட போதிய வழியின்றி, ஊருக்குள் வெள்ளம் புகும் வாய்ப்புள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கீழணையிலிருந்து திறந்துவிடப்படும் நீர் வடக்குராஜன் வாய்க்கால் வழியாக வந்து சிதம்பரம் அருகே குமராட்சி கோப்பாடி மதகு அருகே, கான்சாகிப் வாய்க்காலாக பிரிகிறது. இந்த வாய்க்கால் குமராட்சியில் தொடங்கி கிள்ளை பொன்னந்திட்டு வெள்ளாறு வரை சுமார் 41.25 கி.மீ நீளம் உடையது.

இந்த வாய்க்காலின் 34 மதகுகள் மூலம், சிதம்பரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கவரப்பட்டு, சித்தலாப்பாடி, நஞ்சமகத்துவாழ்க்கை, புஞ்சமகத்துவாழ்க்கை, நக்கரவந்தன்குடி, கொடிப்பள்ளி, பின்னத்தூர், தில்லைவிடங்கன், கீழச்சாவடி, கிள்ளை, பொன்னந்திட்டு உள்ளிட்ட 20 வருவாய் கிராமங்களில் உள்ள 94,410 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.

தற்போது இந்த வாய்க்கால் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்து, தூர்ந்து காணப்படுகிறது. வாய்க்கால் தூர்வாரப்படாததால், இவ்வாண்டு நல்ல மழை பெய்யும்பட்சத்தில் சிதம்பரம் கிழக்குப் பகுதி வெள்ளத்தை சந்திக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தது: இந்த ஆண்டு வறட்சியிலும் காட்டுமன்னார்கோயில் பகுதியில் ஏக்கருக்கு 60 மூட்டை நெல் விளைச்சல் கிடைத்துள்ளது. அதே வேளையில், சிதம்பரத்தின் கடைமடை பகுதிகளில் போதிய பாசன நீரை விநியோகம் செய்யாததால் 71 கிராமங்களில் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுப்பணித்துறையினர் அலட்சியப் போக்குதான் காரணம்.

இந்த ஆண்டு, கடலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையினர் ஆறு, வாய்க்கால்களை போதுமான அளவு மராமத்து செய்யவில்லை. குறிப்பாக, ஆகாயதாமரைச் செடிகள் படர்ந்து கிடக்கும் கான்சாகிப் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு பெய்யும்பட்சத்தில் மழை நீர் கடலில் உடனடியாக வடியாமல், சிதம்பரம் கிழக்குப்பகுதி வெள்ளத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது.

1993-ம் ஆண்டு காவிரி டெல்டா கடை மடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் வறட்சியை சந்தித்த விவசாயிகள், 94-ம் ஆண்டு வெள்ளத்தை சந்தித்தனர்.

2004-ம் ஆண்டு வறட்சியை சந்தித்த விவசாயிகள் 2005-ம் ஆண்டு மிகப்பெரிய வெளத்தை சந்தித்து நெற்பயிர்கள் நாசமாகி பெருத்த நஷ்டமடைந்தனர். அதேபோன்று 2012-ம் ஆண்டு வறட்சியை சந்தித்த சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்கா விவசாயிகள், 2013-ம் ஆண்டு வெள்ளத்தை சந்திக்கும் அபாயம் உள்ளது என்றார் பி.ரவீந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.