திருச்சியில் ஆளில்லா ரயில்வே கேட்டில் நுழைந்த லாரிமீது சரக்கு ரயில் மோதியதால் லாரி ஓட்டுநர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி மாவட்டம் பூங்குடி பகுதியில் அரவாக்குடி என்ற இடத்தில் ஆளில்லை ரயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த கேட் வழியாக சேலத்திலிருந்து வந்த லாரி ஒன்று புதன்கிழமை மாலை கடந்து சென்றது. லாரியை சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா லந்துவாடியைச் சேர்ந்த பி. சண்முகம் (33)ஓட்டிச்சென்றார். கேட்டின் அருகே லாரியை நிறுத்தி ரயில் வருகிறதா என கவனிக்காமல் லாரியை ஓட்டியுள்ளார்.
அப்போது திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற சரக்கு ரயில் லாரியின் முன்பகுதியில் மோதியது. இதில் லாரி நொறுங்கியதுடன் ஓட்டுநர் சண்முகம் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார். இதனையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு ஓட்டுநரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து திருச்சி ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.