திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டம் இல்லை : ஸ்ரீ வத்சவா

திருச்சி விமான நிலையத்தை தனியார்யமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார் இந்திய விமான ஆணையக் குழுமத்தின் தலைவர் ஸ்ரீ வத்சவா.
Updated on
1 min read

திருச்சி விமான நிலையத்தை தனியார்யமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார் இந்திய விமான ஆணையக் குழுமத்தின் தலைவர் ஸ்ரீ வத்சவா.

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 69-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்று தேசியக் கொடியேற்றி வைத்தப் பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

திருச்சி விமான நிலையத்தின் செயல்பாடு, எதிர்கால வளர்ச்சி திட்டங்களுக்கான தேவை போன்றவை குறித்து ஆய்வு செய்வதற்காக முதல் முறையாக இங்கு வந்துள்ளேன். இந்த விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள  வசதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பிரதான நேரத்தில் 420 பயணிகளை கையாளும் வசதி கொண்ட திருச்சி விமான நிலையம்,தற்போது 1000 -த்துக்கும் மேற்பட்ட பயணிகளைக் கையாண்டு வருகிறது. விமான நிலைய வளாகத்துக்குள் வணிக ரீதியிலான அமைப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.திருச்சி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் மற்றும்  நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறது.  விமான நிலைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ஓடுதள விரிவாக்கம் போன்றவற்றை மேற்கொள்ள பெருந்திட்டம் உள்ளது.

திருச்சி விமான நிலைய சரக்கு முனையத்தை விரிவாக்கம் செய்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளது. மேலும், விமான நிலைய வளர்ச்சிக்காக தனியார் மேலாண்மை ஆலோசகரையும் நியமிக்கும் திட்டம் உள்ளது.

திருச்சி விமான நிலையத்தை ஆண்டுக்கு 12 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் திறன் மேம்படுத்தப்படும்.திருச்சி விமான நிலையம் கடந்தாண்டில் ரூ.5  கோடி லாபம் ஈட்டியுள்ளது என்றார் ஸ்ரீ வத்சவா.

முன்னதாக,  விமான நிலையத்தில் நடைபெற்ற  சுதந்தி தின விழாவில்,மத்திய தொழில்பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின்னர், மேலும் அவர் பேசியது:

உடலை வருத்தி தியாகிகள் போராடியதால் நாட்டிற்கு கிடைத்த சுதந்திரத்தை பேணிகாக்க வேண்டும்.  தியாகிகளை நினைவுக்கூர்ந்து அஞ்சலி செலுத்த வேண்டிய நேரமிது. அவர்கள் காட்டிய வழியில் நம்முடைய பயணம் இருக்க வேண்டும்.

இந்திய விமான ஆணையக் குழுமம் சிறப்பாக செயல்பட்டு தனது இலக்கை எட்ட வாய்ப்பு இருக்கிறது. அந்த இலக்கை அடைய அனைவரது கூட்டு முயற்சியும் தேவை. திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் வருவாய் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது.

இந்த நிகழ்வுகளில் விமான ஆணைய தென் மண்டல இயக்குநர் மூர்த்தி, விமான நிலைய இயக்குநர் நெகி, இணைப் பொது மேலாளர் ஜபராஜ், மத்திய தொழில்பாதுகாப்புப் படை துணை கமாண்டன்ட் மிஸ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.                     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com