/

மார்பகப்புற்று நோயில் மீண்ட பெண்ணுக்கு டெஸ்ட்டியூப் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தம்பதியர் சிவக்குமார், லதா(42). இவர்களுக்கு திருமணமாகி கடந்த 20 வருடங்களாக குழந்தை இல்லாத நிலை நீடித்துள்ளது.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு

News image
Updated On :18 பிப்ரவரி 2015, 1:33 pm

என்.​ அங்​கு​பாபு

மார்பகப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட பெண்ணுக்கு டெஸ்ட்டியூப் சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தம்பதியர் சிவக்குமார், லதா(42). இவர்களுக்கு திருமணமாகி கடந்த 20 வருடங்களாக குழந்தை இல்லாத நிலை நீடித்துள்ளது.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லதாவுக்கு மார்பகப்புற்று நோய் ஏற்பட்டது.  இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை மேற்கொண்டு லதா புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார். எனினும் குழந்தை இல்லாத நிலையில் டெஸ்ட்டியூப் சிகிச்சைக்கு பழனி ஐஸ்வர்யா கருத்தரித்தல் மைய இயக்குனர் சந்திரலேகாவிடம் தம்பதியர் ஆலோசனை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சிகிச்சைகளின் முடிவில் அவர்களுக்கு கடந்த சிலதினங்களுக்கு முன்பு இரண்டரை கிலோ எடையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது. 

தாயும், சேயும் நலமாக உள்ள நிலையில் இந்த சாதனை இந்தியாவிலேயே எந்த மருத்துவரும் செய்யாத சாதனை என பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மருத்துவர் சந்திரலேகா தெரிவித்ததாவது:-

மார்பகப் புற்றுநோயில் இருந்து மீண்ட லதாவுக்கு முதலில் புற்றுநோய் பாதிப்பு வேறு ஏதும் உடல் பாகத்தில் உள்ளதா என முழு பெட்ஸ்கேன் எடுக்கப்பட்டது. ஏராளமான சிகிச்சையால் லதாவின் உடல் இயற்கையான கருத்தரிப்புக்கு தயாராக இல்லாத நிலையில் அவருக்கு டெஸ்ட்டியூப் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.  புற்றுநோய் பாதிப்பும் எந்த உடல்பாகத்திலும் இல்லை என ஆய்வு முடிவுகள் வந்த பிறகு அவரது கணவருக்கும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அவரிடம் இருந்து விந்தணு பெறப்பட்டு கருமுட்டையோடு இணைத்து கரு உருவாக்கப்பட்டது. 

பின்னர் அந்தக்கரு லதாவிற்குள் செலுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புடன் கூடிய பிரசவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  இதற்கென தனிகுழு அமைக்கப்பட்டு லதா கண்காணிக்கப்பட்டு வந்தார்.  இதைத் தொடர்ந்து அவர் ஆண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.  குழந்தைக்கு புற்றுநோய் பாதிப்பு முற்றிலும் இல்லை. பெண்களுக்கு அதிக அளவு மார்பகப்புற்று, கர்ப்பவாய்புற்று ஆகியன ஏற்படுகிறது. தற்போதைய வெற்றி மூலமாக வரும் காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களும் குழந்தை பாக்கியம் பெறலாம் என்ற தீர்வு கிடைத்துள்ளது.  புற்றுநோய் தாக்கம் உள்ளது முதலிலேயே தெரிந்து விட்டால் அது முற்றுவதற்கு முன் விந்தணு, கருமுட்டைகளை சேகரித்து சுமார் ஐந்து வருட காலம் பாதுகாத்து வைக்க இயலும்.  இதனால் நோய் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முறையை பின்பற்றி பின் சிகிச்சை மேற்கொண்டு மீளலாம் என தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.