டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தனியார் துறைமுகத்துக்கு திருப்பிவிடப்பட்ட சரக்குப் பெட்டகக் கப்பல்: தொடரும் நெரிசல் பிரச்னை

சென்னைத் துறைமுகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் இத்துறைமுகத்திற்கு

News image
Updated On :19 ஜூன் 2015, 9:38 pm

முகவை க.சிவக்குமார்

சென்னைத் துறைமுகத்தில் தொடர்ந்து நீடித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் இத்துறைமுகத்திற்கு இந்த வாரம் வரவேண்டிய "எம்.வி.சீலேண்டு காமெட்' என்ற சர்வதேச சரக்குப் பெட்டகக் கப்பல் எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி தனியார் துறைமுகத்துக்கு திருப்பி விடப்பட்டது.
 சென்னைத் துறைமுகத்தில் உள்ள சரக்குப் பெட்டக முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 18 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் கையாளப்படுகின்றன. ஆனால், இதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை முழுமையாக ஏற்படுத்தாததால் கடந்த சில ஆண்டுகளாக கடும் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. ஏற்றுமதிக்காக வரும் சரக்குப் பெட்டகங்கள் சென்னைத் துறைமுகத்தின் உள்ளே சென்றடைய சுமார் 3 முதல் 5 நாள்கள் வரை காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
 இதே போல் இறக்குமதியாகும் சரக்குப் பெட்டகங்கள் துறைமுகத்தின் முனையங்களிலிருந்து சரக்குப் பெட்டக நிலையங்களுக்கு எடுத்துச் செல்லவே ஒரு வாரம் வரை ஆகிறது. இதனால் ஏற்கெனவே வேளாண் விளைபொருள் உள்ளிட்ட குறிப்பிடத் தகுந்த சரக்குகள் வேறு துறைமுகங்களுக்குச் சென்றுவிட்டன.
 இந்த நிலையில், உலகில் மிகப்பெரிய கப்பல் நிறுவனங்களில் ஒன்றான மார்க்ஸ் நிறுவனம் சார்பில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வர வேண்டிய "எம்.வி.சீலேண்டு காமெட்' என்ற கப்பலில் வரும் சரக்குகளைத் அருகில் உள்ள காட்டுப்பள்ளித் துறைமுகத்தில் இறக்க அனுமதிக்கும்படி சென்னை சுங்கத் துறையிடம் கடந்த ஜூன் 12-ல் அனுமதி கோரப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்த சுங்கத் துறை கப்பலை காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு கொண்டு சென்று கையாள அனுமதி அளித்தது. இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை காட்டுப்பள்ளித் துறைமுகத்துக்கு வந்த இந்தக் கப்பல் இருபது அடி அளவிலான 3,246 சரக்குப் பெட்டகங்களை இத்துறைமுகத்தில் கையாண்டுள்ளது. இது குறித்து சுங்கத் துறை முகமை நிறுவன மேலாளர் ஜெகநாதன் கூறியதாவது: முன்பு சென்னைத் துறைமுகம் ஒன்றுதான் இருந்தது. ஆனால் தற்போது சென்னைக்கு அருகே 27 கி.மீ. தொலைவில் காமராஜர் துறைமுகம், 29 கி.மீ. தொலைவில் காட்டுப்பள்ளி எல் அண்டு டி துறைமுகம், 170 கி.மீ. தொலைவில் கிருஷ்ணாபட்டனம் துறைமுகம், 295 கி.மீ. தொலைவில் காரைக்கால் துறைமுகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
 காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு மார்க்ஸ் நிறுவன கப்பல் திருப்பிவிடப்பட்டுள்ளது சென்னைத் துறைமுகத்துக்கு நேரடியாக விடப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும். இனியும் சரக்குப் பெட்டக போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சென்னைத் துறைமுகம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அடுத்தடுத்து பல கப்பல் நிறுவனங்களும் தங்களது கப்பல்களை இந்தப் புதிய துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லும் என்றார் ஜெகநாதன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.