திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காய்கறிகளின் விலை குறைவது எப்போது?

தொடர் மழையால் சென்னையில் காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றின் விலை எப்போது குறையும் என்பதற்கு

News image
Updated On :20 நவம்பர் 2015, 9:28 pm

தொடர் மழையால் சென்னையில் காய்கறிகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இவற்றின் விலை எப்போது குறையும் என்பதற்கு வியாபாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
 மேலும், காய்கறிகளின் விலை உயர்வு தங்களது வார, மாத பட்ஜெட்டில் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இல்லத்தரசிகள் தெரிவித்தனர்.
 சென்னையைப் பொருத்தவரை கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வரை காய்கறிகளின் விலை தக்காளி கிலோ ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.25, பீன்ஸ் 30, கத்தரிக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.30 என்ற நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் பலத்த மழை பெய்ததால் அவற்றின் விலை இரு மடங்காக அதிகரித்துக் காணப்பட்டது.
 இதையடுத்து, சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி கிலோ ரூ.110 வரையிலும், பெரிய வெங்காயம் ரூ.85 வரையிலும் விற்கப்பட்டன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ.60 முதல் ரூ.70-க்கு விற்கப்பட்டது. முக்கிய காய்கறிகள் 10 நாள்களில் 4 முறை பெரிய அளவிலான ஏற்ற-இறக்கங்களைக் கண்டுள்ளன.
 இதுகுறித்து எழும்பூரைச் சேர்ந்த சிவகாமி, கே.கே.நகரைச் சேர்ந்த பார்வதி, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த லட்சுமியம்மாள் ஆகியோர் தெரிவித்த கருத்துகள்:
 கோயம்பேடு சந்தையில் விற்கப்படும் காய்கறிகளின் விலை தியாகராயநகர், எழும்பூர், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குப் பொருந்தாது. ஏனெனில், பெரும்பாலான பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகே உள்ள கடைகளில் மட்டுமே காய்கறிகளை வாங்க விரும்புவர்.
 ஆனால், அந்தக் கடைகளில் காய்கறிகளின் விலை தற்போது தாறுமாறாக அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.50-க்கு விற்கப்பட்ட தக்காளி திங்கள்கிழமை (நவ.16) ரூ.100-க்கும், வெள்ளிக்கிழமை (நவ.20) ரூ.70-க்கும் விற்கப்பட்டது. ஆனால், மொத்த விலையில் இந்த அளவுக்கு ஏற்ற இறக்கங்கள் இல்லை. கோயம்பேடு சந்தைக்கு வாரம் ஒரு முறை சென்று ரூ.100-க்கு மூன்று கிலோ தக்காளியை வாங்கினால் கிட்டத்தட்ட நான்கு, ஐந்து நாள்கள் வரை போதுமானதாக இருக்கும். ஆனால், எங்கள் வீட்டின் அருகே உள்ள கடைகளில் சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70-க்கு வாங்க வேண்டியுள்ளது.
 அதிக விலை உயர்வுக்குக் காரணம் என்ன? மழையால் காய்கறிகள் வரத்து இல்லை என்ற காரணத்தைக் கூறியே அவற்றின் விலையை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். வாரத்துக்கு காய்கறிக்கென ரூ.200 முதல் ரூ.250 வரை செலவாகும். ஆனால், இந்த வாரம் அது ரூ.500-ஆக உயர்ந்துள்ளது. அரசின் சார்பில் பசுமைப் பண்ணை அங்காடிகளில் விற்கப்படும் காய்கறிகள் ஓரிரு மணி நேரங்களில் விற்றுத் தீர்ந்து விடுகின்றன. எனவே, கட்டுக்கடங்காத காய்கறிகளின் விலையை முறைப்படுத்த தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
 சில்லறை வியாபாரிகள் கருத்து: இதுகுறித்து கோயம்பேடு சின்மயா நகரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி பாரதி, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ரத்னவேல் ஆகியோர் கூறியது: நாங்கள் காய்கறியை அதிக விலைக்கு விற்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மொத்த விலையில் ரூ.50-க்கு விற்கப்படும் தக்காளி போக்குவரத்துச் செலவு, கூலி உள்ளிட்ட காரணங்களால் சில்லறை விலையில் ரூ.70-ஆக உயர்ந்து விடுகிறது. அதையே கால் கிலோ எனும்போது ரூ.20-க்கும், அரை கிலோ என்றால் ரூ.40-க்கும் விற்கிறோம். கடந்த மாதம் தினமும் 60 கிலோ முதல் 80 கிலோ தக்காளி விற்பனையானது. அதனால் கிலோ ரூ.50-க்கு விற்கப்பட்டது. தற்போது 30 கிலோ தக்காளி கிடைப்பதே அரிதாகிவிட்டது. அதிலும் அதிக ஈரப்பதம் காரணமாக கிலோவுக்கு 100 கிராம் முதல் 200 கிராம் வரை அழுகி விடுகிறது. இறுதியில் மீதமாகும் தக்காளியை குப்பையில் கொட்டுகிறோம். கோயம்பேடு சந்தைக்கு பிற மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை அதிகரித்துள்ளது என்றனர்.
 மொத்த வியாபாரிகள் கருத்து: இரு தரப்பினரின் கருத்துகள் குறித்து கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சௌந்தரராஜன், தியாகராஜன் ஆகியோர் கூறியது: கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் நினைத்தது போல் காய்கறிகளின் விலையை உயர்த்தி விற்க முடியாது. வியஜவாடா, கர்நாடகம், ஹைதராபாத், ஆந்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய காய்கறிச் சந்தைகளில் நிலவும் விலையைப் பொருத்தே அவற்றின் விலை நிர்ணயிக்கப்படும். ஒரு லாரியில் 15 டன் காய்கறிகளை ஏற்ற முடியும்.
 ஆந்திர மாநிலத்திலிருந்து கோயம்பேட்டுக்கு கொண்டுவர லாரி வாடகை, ஏற்றுக்கூலி என டன்னுக்கு ரூ.1,200 வரை செலவாகிறது. மழைக் காலங்களில் காய்கறிகளின் விலை வழக்கமாக அதிகரிக்கும்.
 ஆனால், இந்த முறை தக்காளி, பெரிய வெங்காயம் உள்பட முக்கியக் காய்கறிகளின் விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை நிலையாக இல்லாமல் அதிகளவு ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. காய்கறி விற்பனையைப் பொருத்தவரையில் எல்லா நாளும் ஒரே மாதிரியாக இருக்காது. தேவை அதிகரித்தால் விற்பனை இரு மடங்கு இருக்கும். வாங்க நபர்கள் இல்லாமல் போனால் தேக்கமடையும். எனவே, உற்பத்தி அதிகரிப்பதுடன், காய்கறிகளை சாகுபடி நிலத்திலிருந்து ஏற்றி இறக்குதற்கான சரியான சூழல்கள் இருந்தால், பொதுமக்களுக்கு காய்கறிகளைக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதில் எந்தத் தடையும் இருக்காது என்று தெரிவித்தனர்.
 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.