சென்னை புறநகர் பேருந்து நிலையம்: நிலம் தர உரிமையாளர்கள் மறுப்பு
தாம்பரம் அடுத்த வண்டலூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்துக்கு இடம் தர நில உரிமையாளர்கள் ஒட்டு மொத்தமாக மறுத்துவிட்டனர்.


தாம்பரம் அடுத்த வண்டலூரில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையத்துக்கு இடம் தர நில உரிமையாளர்கள் ஒட்டு மொத்தமாக மறுத்துவிட்டனர்.
சென்னை மாநகர மக்கள் தொகை பெருக்கம், அதிகரித்து வரும் வெளி மாநில மற்றும் பிற மாவட்ட மக்களின் புழக்கம், பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கோயம்பேட்டில் சென்னை புறநகர் பேருந்து நிலையம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 180 பேருந்துகள் இயங்கவும், மேலும் 60 இயக்கத்தில் இல்லாத பேருந்துகளை நிறுத்தவும் வசதி உள்ளது.
போக்குவரத்து நெரிசல்: ஆனால் கடந்த 10 ஆண்டு காலத்தில் இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினம் சுமார் 3 ஆயிரம் தடவை இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் வரும் பேருந்துகள் நாள் முழுவதும் பேருந்து இயக்குமிடம் மற்றும் சாலை ஓரங்களிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் கோயம்பேடு பேருந்துகள் நிலையத்திலிருந்து வெளியே செல்ல மணிக் கணக்கில் காத்திருக்கும் அவலம் உள்ளது. பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில் பயணிகளின் பாடு பெரும் திண்டாட்டம்தான்.
வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம்: கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகளில் பாதிக்கு மேல் தென் மாவட்டங்களுக்கு செல்பவையாக இருப்பதைக் கருத்தில் கொண்டும், தென் மாவட்டங்களிலிருந்து வந்து செல்லும் பேருந்துகளுக்கென தெற்கத்திய பெருஞ்சாலை மற்றும் வெளி வட்டச்சாலை ஆகியவற்றிற்கு இடையே வண்டலூர் - வாலாஜாபாத் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி வண்டலூர் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று 2013-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா 110 விதிகளின் கீழ் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் குறிப்பிட்ட பகுதியில் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பெற கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் பலதரப்பட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இதனால் நிலத்தை எடுக்க முடியாமல் சென்னை பெருநகர குழுமம் திணறி வருகிறது.
மீண்டும் முதல்வர் அறிவிப்பு: இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கையின் போது, மத்திய அரசின், புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம், நிலுவையில் உள்ளதால், இத்திட்டத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தாமதப்படுகிறது.எனவே, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் நேரடியாக பேசி, நிலத்தை பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, அப்பகுதியில் அமைந்துள்ள நிலங்களை ஒருங்கிணைத்து, ஒரு விரிவான திட்டம் தீட்டி, அதில் பேருந்து முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அரசு வழிகாட்டி மதிப்பில் 150 சதவீதம்: இந்த நிலையில் பேருந்து நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதி நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்கும் வகையிலான கூட்டம் வண்டலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்காக 119 நில உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இக்கூட்டத்துக்கு வெளிவட்ட சாலைத் திட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் குணாலன் தலைமை வகித்து கூறியது: சென்னை புறநகர் பேருந்து நிலையம் வண்டலூரில் அமைப்பது குறித்து கடந்த 2013-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் அறிவித்தார். அதன் பிறகு நிலம் கையகப்படுத்தும் சட்டம் காலாவாதியானதால் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர்புடைய 119 நில உரிமையாளர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் நிலம் தருவதாக ஒத்துக் கொண்டால், இருவருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
புறநகர் பேருந்து நிலையத்துக்கென வண்டலூர் - வாலாஜாபாத் சாலையில் 60.35 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் சாலையை ஒட்டியுள்ள 30 ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 ஏக்கர் இடம் உரிமையாளர்களுக்கு பிரித்து வழங்கப்படும். இந்த பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தரப்படும். மேலும் கையகப்படுத்தும் நிலத்துக்கு அரசு வழிகாட்டி மதிப்பில் இருந்து 150 சதவீதம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றார் மாவட்ட வருவாய் அலுவலர் குணாலன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...