

வறண்டு பாலைவனமாகக் காட்சியளிக்கும் தாதம்பாளையம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வர 60 ஆண்டுகளாகப் போராடியும் இதுவரை திட்டம் நிறைவேறாததால், வேதனையில் உள்ளனர் இந்தப் பகுதி விவசாயிகள்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலையில் அமராவதி ஆறு உருவாகிறது. அங்கிருந்து கோவை, ஈரோடு மாவட்டங்கள் வழியாக கரூரை வந்தடைந்து, திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் இந்த நதி இணைகிறது. இதன் துணை நதிகளாக குதிரை ஆறு, உப்பாறு, நல்லதங்காள்ஓடை, நங்காஞ்சி ஆறு, குடகனாறு போன்றவை உள்ளன.
இந்த நதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதிகளவு தண்ணீர் ஓடியதால், ஆற்றின் குறுக்கே அணைப்பாளையத்தில் 1876-இல் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த அணையில் இருந்து அணையைச் சுற்றியுள்ள பகுதிகள் பாசன வசதி பெறும் வகையில்
பள்ளபாளையம் இராஜவாய்க்கால் உருவாக்கப்பட்டது. இந்த வாய்க்கால் சுமார் 3,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக இருந்தது.
மழைக் காலங்களில் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர் வாய்க்காலை உடைத்துக் கொண்டு வெளியேறி விளைநிலங்களை பாழ்படுத்தி வந்ததால், தாதம்பாளையத்தில் 1881-இல் அப்போதைய ஆங்கிலேய அரசு சுமார் 420 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரியை அமைத்து, அதில் வெள்ளநீரைத் தேக்கி வைத்தது. இந்த நீர் வறட்சிக் காலங்களில் ஏரியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நீர்ப்போக்கி வழியாக வெளியேற்றப்பட்டு, கரூர் நகரம் உள்ளிட்ட பகுதிகளின் விவசாய நிலங்களுக்கும், குடிநீர் பிரச்னைக்கும் தீர்வாக இருந்தது.
நாளடைவில் ஏரியில் நீர் வற்றிப் போனதால், ஆற்றில் அவ்வப்போது வரும் உபரி நீரை ஏரியில் சேமிக்கும் வகையில் ஒரு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 1950-இல் அணைப்பாளையம் அணைத் தண்ணீரை முடிகனம், தொட்டிவாடி, எருமைகாரன்புதூர் வழியாக தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு வரத் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையே, 1970-இல் கடும் பஞ்சம் நிலவியதால் ஏரியின் உள்ளே விவசாயம் செய்ய சிலர் முற்பட்டனர். இதனால், பொதுப் பணித் துறையினர் ஏரியை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர். அங்கு புங்கம், வேம்பு உள்ளிட்ட மரங்கள் நடப்பட்டன. நாளடைவில் ஏரியில் இருந்த மரங்கள் காணாமல் போயின. தற்போது ஏரியில் கருவேல மரங்கள் முளைத்து, அடர்ந்து வனம் போன்று காட்சியளிக்கிறது.
இதுதொடர்பாக விவசாயி புளியம்பட்டி ராமசாமி கூறியதாவது:
ஏரியைத் தூர்வாரி மீண்டும் தண்ணீர் நிரப்பும் வகையில், நான், ராஜாமணி பழனிசாமி உள்ளிட்ட விவசாயிகள் 1991 முதல் முயற்சி மேற்கொண்டோம். இதை தொடர்ந்து, 2002- பிப்ரவரியில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் தலைமையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டது. நஞ்சைத்தலையூர் அணையில் இருந்து ஏற்கெனவே அமராவதி ஆற்றை நம்பி விவசாயம் செய்யும் பல்வேறு ஆயக்கட்டு விவசாயிகள் பாதிக்காதவாறு, காவிரியில் கலந்து வீணாகக் கடலுக்குச் செல்லும் நீரை தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு வரத் திட்டமிடப்பட்டது.
இந்தத் திட்டத்தின்படி, சுமார் 24 கி.மீ. வாய்க்கால் அமைக்க வேண்டும். இந்த வாய்க்காலை சின்னமுத்தாம்பாளையத்தில் இருந்து ஆரியூர், நல்லிசெல்லிபாளயைம், தொட்டிவாடி, கிழுவங்காட்டூர் வழியாக தாதம்பாளையம் ஏரி வரை இயற்கையாகவே ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலுடன் இணைக்க வேண்டும். இந்த வாய்க்காலைச் சீரமைத்தால் மட்டும் போதும்.
இதன்மூலம், அமராவதி ஆற்றில் இருந்து சுமார் 39 கி.மீ. தொலைவுக்கு பயணித்து, அமராவதி உபரி நீர் தாதம்பாளையம் ஏரியை வந்தடையும். இந்தத் தண்ணீரை வரும் வழியில் உள்ள குளங்களுக்குத் திருப்பிவிடலாம். இதன்மூலம், சுமார் 13,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஆனால், இந்தத் திட்டம் இன்னமும் முடங்கியே உள்ளது. இந்தத் திட்டத்தை உடனே தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்தப் பகுதி விவசாயிகளின் கோரிக்கை என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.