

ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறுவதற்கான தேர்வு முறையில் முறைகேடுகளைத் தடுக்க கணினி மூலம் கண்காணிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, அண்மையில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தில் என்ஐடி மாணவர்கள் பங்கேற்றனர்.
உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, கடந்த 2013-இல் உலகளவில் சுமார் 5.40 கோடிப் பேர் சாலை விபத்துகளில் சிக்கியதாகவும், இவர்களில் 14 லட்சம் பேர் மரணத்தைத் தழுவியதாகவும் தெரிய வந்துள்ளது.
சாலை விபத்து குறித்து எத்தனையோ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பள்ளி, கல்லூரிகள் அளவில் மேற்கொண்டாலும், அதிகளவில் விபத்து நேர்வதற்கு முறையான பயிற்சியின்றி வாகனம் ஓட்டுவதே முக்கியக் காரணம். வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் சிலர் பயிற்சி பெற்றாலும், அதை அரைகுறையாகக் கற்று இலகுரக வாகனமோ, இரு சக்கர வாகனமோ ஓட்ட முதலில் உரிமம் பெற்று விடுகின்றனர்.
முழுமையான பயிற்சி பெறாமல் வாகனங்களை இயக்குவோரால் மட்டுமே அதிகளவில் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. இத்தகைய வாகன ஓட்டுநர்களைத் தொடக்கத்திலேயே கண்டறிய தற்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கணினி முறையில் அதைக் குறைபாட்டைக் கண்காணிக்க புதிய செயல் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
இதன் முதல் கட்டமாக, கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சுமார் ரூ. 4 லட்சத்தில் இதற்கான தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்று தேர்வுக்கு வருவோர், வாகனத்தை ஓட்டிக் காண்பிக்கும் போது ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காண்பிக்க ஆங்காங்கே மின்னணு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை கட்டுப்பாட்டு அறையுடன் அங்குள்ள கணினியில் இணைக்கப்பட்டிருக்கும்.
தேர்வில் பங்கேற்று வாகனத்தை இயக்கும் வாகன ஓட்டிகள் தவறு செய்தால், உடனே அதைக் கணினியில் காண்பித்துவிடும். மேலும், தளத்தின் இரு இடங்களில் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவையும் வாகன ஓட்டி செய்யும் தவறை முறையாக சுட்டிக் காண்பித்துவிடும்.
இதுதொடர்பாக திருச்சி என்ஐடி மாணவர்கள் கூறியதாவது:
மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மேம்பாட்டுத் துறை சார்பில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு இந்தச் செயல் திட்டத்தை (புராஜக்ட்) நாங்கள் எடுத்துள்ளோம். "எலக்ட்ரானிக் டெஸ்டிங் டிராக்கிங்' என்னும் முறையில் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 இடங்களில் "சென்சர்' கருவி வைக்கப்பட்டிருக்கும்.
இதேபோல, வெப்கேமராவும் தளத்தின் மேல் பகுதியில் தொங்கவிடப்பட்டிருக்கும். அனைத்துக் கருவிகளும் கணினியுடன் இணைக்கப்பட்ட பிறகு, வாகன ஓட்டிகள் செய்யும் தவறுகளுக்கு ஏற்ப கணினியே மதிப்பெண்கள் அளிக்கும்.
பின்னர், வாகன ஓட்டியின் தவறுகளுக்கு ஏற்ப அவர் தேர்ச்சி பெற்றாரா அல்லது தோல்வியைத் தழுவினாரா என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காண்பித்துவிடும்.
இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டச் சோதனையோட்டம் தற்போது நடைபெறுகிறது. விரைவில் இந்தச் செயல் திட்டம் நடைமுறைக்கு வரும் என்றனர் அவர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.