

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக் கழிவுகள் மூலம் தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுவதால் அந்தத் தொழிலை நம்பி இருக்கும் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மேலும், இந்தத் தேயிலைத் தூளைப் பயன்படுத்தும் நுகர்வோரின் உடல்நலமும் கேள்விக்குறியாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தின் முக்கியப் பொருளாதார ஆதாரமாக விளங்கி வருவது தேயிலைத் தொழிலாகும். இந்த மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தேயிலை விவசாயிகள் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர்.
160-க்கும் மேற்பட்ட சிறு தேயிலைத் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சில தொழிற்சாலைகளில் கழிவுத் தேயிலையைக் கொண்டு தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கலப்படத் தேயிலைத் தூள்: நீலகிரி மாவட்டத்தின் சில தொழிற்சாலைகளில் பசுந்தேயிலையுடன் ஆர்.சி. (ரீகண்டிஷன்) எனப்படும் கழிவுத் தேயிலைகளை 50- 70 சதவீதம் வரை கலந்து தேயிலைத் தூள் உற்பத்தி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
கேரளத்தின் வண்டிப்பெரியாறு, வயநாடு, இடுக்கி, பாலக்காடு, தமிழகத்தின் வால்பாறை ஆகிய பகுதிகளில் பெரிய தேயிலைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தத் தொழிற்சாலைகளில் தேயிலைத் தூள் தயாரித்த பின்னர் அதன் கழிவுகளைக் கொட்டி விடுவர். அவற்றை நீலகிரி மாவட்டத்தில் உள்ள சில தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒரு கிலோ ரூ. 10- ரூ. 20 வரை கொடுத்து வாங்கி, பசுந்தேயிலையோடு கலந்து தேயிலைத் தூள் உற்பத்தி செய்கின்றனர்.
உதாரணத்துக்கு, ஒரு கிலோ பசுந்தேயிலை ரூ. 15-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 கிலோ பசுந்தேயிலையை அரைத்தால் ஒரு கிலோ தரமான தேயிலைத் தூள் கிடைக்கும். இதன் கூலி, போக்குவரத்து, வரி உள்ளிட்டவை சேர்த்து ரூ. 120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால், 4 கிலோ பசுந்தேயிலையுடன், ஒரு கிலோ தேயிலைக் கழிவுகளைச் சேர்த்து அரைத்தால், ஒரு கிலோ 250 கிராம் தேயிலைத் தூள் கிடக்கும். இதை வெளிச் சந்தையில் ஒரு கிலோ ரூ. 100- ரூ. 120 வரை விற்பனை செய்கின்றனர். இதனால், தரமான தேயிலையை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களும், தேயிலை விவசாயிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இதை வாங்கிப் பயன்படுத்தும் நுகர்வோரின் உடல்நலமும் கேள்விக்குறியாகி உள்ளது.
ஆகவே, நீலகிரி மாவட்டத்துக்குள் கழிவுத் தேயிலைகள் கொண்டு வருவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், தேயிலை வாரியமும் இணைந்து மாவட்டத்தின் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேயிலை விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுகுறித்து தென்னிந்திய தேயிலை வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தேயிலைக் கழிவுகளைக் கொண்டு தேயிலைத் தூள் உற்பத்தி செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த வகையிலான தேயிலைத் தூள்களில் ஃபைபர் அதிகம் இருப்பதால், உணவுத் தரக் கட்டுப்பாட்டுச் சான்று பெற முடியாது. ஆகவே, இவற்றை உற்பத்தி செய்வோர் வெளிச் சந்தைகளில் விற்பனை செய்துவிடுகின்றனர். இதுபோன்ற தொழிற்சாலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.