ஆம்னி பேருந்துகளுக்கு அரசே கட்டணம் நிர்ணயிக்கலாம்!
அரசுப் பேருந்துகளின் சேவைக் குறைபாடு, தரமற்ற பேருந்துகள், போக்குவரத்து கழகத்தின் நிர்வாகத் திறமையின்மை, தகவல் தொடர்பில் குறைபாடு போன்ற...


அரசுப் பேருந்துகளின் சேவைக் குறைபாடு, தரமற்ற பேருந்துகள், போக்குவரத்து கழகத்தின் நிர்வாகத் திறமையின்மை, தகவல் தொடர்பில் குறைபாடு போன்ற காரணங்களால் பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தியாவது ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் நிலை அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் மாநில அரசின் அனுமதி பெற்ற 1,106 பேருந்துகள், தேசிய அனுமதி பெற்ற 306 ஆம்னி பெருந்துகள், புதுச்சேரி, கர்நாடக, ஆந்திர மாநில அரசுகளின் அனுமதி பெற்ற 2,600 பேருந்துகள் என மொத்தம் 4,012 பேருந்துகள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆர்.டி.ஓ. கண்காணிப்புக் குழுக்களையும் தாண்டி, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக்காலம் மற்றும் தொடர் விடுமுறைக் காலங்களில் அனுமதியின்றியும் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. படுக்கை வசதி உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பல்வேறு தரப்பினரும் ஆம்னி பேருந்துகளை அதிகம் விரும்புகின்றனர்.
முறையாகப் பராமரிக்கப்படாத பழைய பேருந்துகளை இயக்குதல், சாலையோர தரமற்ற உணவகங்களில் நிறுத்திச் செல்லுதல், கூடுதல் நேரப் பயணம் உள்ளிட்ட காரணங்களால் அரசுப் பேருந்துகளில் வெளியூர்களுக்கு செல்வதை நடுத்தர வர்க்கத்தினர் தவிர்க்கின்றனர். இருப்பினும், கட்டணக் குறைவு என்ற ஒரே காரணத்துக்காக, இதுபோன்ற பல்வேறு இன்னல்களையும் தாங்கிக் கொண்டு அரசுப் பேருந்துகளில் சாதாரண நிலையில் உள்ள மக்கள் பயணிக்கின்றனர்.
ஆம்னி பேருந்துகளின் அசுர வேகத்தால் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டாலும், அவற்றில் சொகுசான பயணம் மேற்கொள்ள முடியும் என்பதால், பயணிகளுக்கு அது பொருட்டாகவே தெரிவதில்லை. அதோடு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால், நடுத்தர வர்க்கத்தினர், கல்லூரி மாணவர்கள், குடும்பத்துடன் பணி நிமித்தம் வெளியூர்களில் தங்கியிருப்பவர்கள் போன்றோர், பண்டிகைக் காலங்களில் ஆயிரக்கணக்கில் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆம்னி பேருந்துகளில் வந்து செல்ல வேண்டியுள்ளது.
தொடர் விடுமுறை: அண்மையில் சனி, ஞாயிறு வார விடுமுறையைத் தொடர்ந்து ஆயுத பூஜை, விஜயதசமி, மொஹரம் பண்டிகை என 5 நாள்கள் தொடர் விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து மட்டும் மற்ற நகரங்களுக்கு சுமார் 1200 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்தப் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்தோர் 40 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் செலுத்தியே பயணம் செய்தனர். சென்னையிலிருந்து திருச்சிக்கு ரூ. 650, கோவைக்கு ரூ. 900, மதுரைக்கு ரூ. 850, தஞ்சாவூருக்கு
ரூ. 650, திருநெல்வேலிக்கு ரூ. 1000 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும், ஏ.சி. பேருந்துகளில் கூடுதலாக ரூ. 200 வரை வசூலிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு சிறப்புப் பேருந்துகள் முறையாக அறிவித்து முன்பதிவு செய்யப்படுவது போல, ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைக்கும், தொடர் விடுமுறை நாள்களுக்கும் அரசு சிறப்புப் பேருந்துகளை முறையாக அறிவித்து, முன்பதிவுக்கான சிறப்பு கவுன்டர்களை திறக்க வேண்டும். இதன்மூலம், கட்டணக் கொள்ளையை ஓரளவுக்குத் தடுக்க முடியும்.
அரசியல்வாதிகள், தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள், பினாமிகள் மூலம் அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பிரபல தொழிலதிபர்கள் போன்றோர் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்களை நடத்துவதால், இதுபோன்ற முறைகேடுகள் கண்டுகொள்ளப்படுவதில்லை என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.
ஆனால், தமிழக அரசு போக்குவரத்துத் துறை, ஆம்னி பேருந்துகளுக்கு காலாண்டு முறையில் வரி வசூலிக்க முன்வந்தால் ரூ. 200 வரை கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆம்னி பேருந்து நிர்வாகத்தினர்.
எது எப்படியாயினும், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நெறிப்படுத்துவதோடு, தொடர் விடுமுறை நாள்களில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அதிகளவில் இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
கட்டணக் கொள்ளையை எளிதில் தடுக்கலாம்...
ஆம்னி பேருந்துகளில் பயணிக்க இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுவதால், அவற்றின் இணையதளத்தை ஆய்வு செய்தாலே அதிகக் கட்டணம் குறித்து அறிந்து கொள்ளலாம். இதற்கு நடவடிக்கை எடுக்க பயணிகளின் புகார் மனுவும் தேவையில்லை. சாட்சியும் தேவையில்லை. நீதிமன்றமே தாமாக முன்வந்து இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
மாற்று யோசனை
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ், தமிழக போக்குவரத்துத் துறைச் செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்ய, அரசு போக்குவரத்துத் துறை சார்பில் ஓர் இணையதளத்தை புதிதாக உருவாக்க வேண்டும். அந்த இணையதளம் வழியாக மட்டுமே அனைத்துப் பேருந்துகளிலும் பயணிக்க பயணச்சீட்டு முன்பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும். தனியார் பேருந்து நிறுவனங்களின் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்வதற்குத் தடை விதிக்க வேண்டும்.
தமிழ அரசின் இந்த இணையதளத்தில் பயணிகளே நேரடியாக முன்பதிவு செய்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும். ஒவ்வொரு பயணச் சீட்டுக்கும் முன்பதிவுக்கு என ரூ. 10 வீதம் தமிழக அரசு சேவைக் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம். இதன் மூலம், அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். இதன் மூலம், அனுமதி இல்லாத பேருந்துகள் இயக்கப்படுவது ஒழிக்கப்படுவதோடு, பயணிகளிடமிருந்து அதிகக் கட்டணம் வசூலிப்பதும் தடுக்கப்பட்டுவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...