ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைந்து வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது?
Published on
Updated on
1 min read

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைந்து வரும் புதன்கிழமை (ஏப்.12) நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குக்கு பணம் கொடுப்பதாக பரவலாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

அ.தி.மு.க (அம்மா) அணி சார்பில் டி.டி.வி. தினகரன், அதிமுக (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் பின்னணிப் பாடகர் கங்கை அமரன், தேமுதிக சார்பில் மதிவாணன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் லோகநாதன் ஆகியோர் உள்பட 62 பேர் போட்டியிட்டனர்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றன.

இதையடுத்து இந்திய அரசியல் சாசனம் 324ன் கீழ் 150, 30 மற்றும் 56 பிரிவு, மக்கள் பிரநிதித்துவ சட்டம் 1952 மற்றும் பொது உட்பிரிவு சட்டம் 1897, 21 பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்திற்கு தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் இருக்கிறது. இவற்றின் கீழ் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவித்து உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மீண்டும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர் இறந்த பின்பு அல்லது பதவி விலகிய பின்னர் 6 மாதத்திற்குள் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். ஜெயலலிதா மறைவை அடுத்து டிசம்பர் 5-ஆம் தேதியில் இருந்து ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. வருகிற 5-ஆம் தேதிக்குள் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதே நேரத்தில் ஜூலை மாதம் குடியரசு தலைவர் தேர்தலும் நடத்தப்பட உள்ளது. குடியரசு தலைவர் தேர்தல் நடக்கும் போது எந்த தொகுதியும் காலியாக இருக்கக் கூடாது.

எனவே, தற்போது ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையம் மே மாத இறுதியில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அமைதியான, நேர்மையான சூழல் நிலவும் போது மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com