மரியாதைக்குரிய ஓபிஎஸ் அவர்களுக்கு ஒரு கடிதம்
மகாபாரதத்தில் சொல்லப்படாத விஷயம் ஏதாவது உண்டா? மகாபாரதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது


மகாபாரதத்தில் சொல்லப்படாத விஷயம் ஏதாவது உண்டா? மகாபாரதம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அதன் கிளைக் கதைகள். நீதிகளை குட்டிக் கதைகளின் வடிவில் நமக்கு அளித்திருக்கிறது மகாபாரதம். அப்படிப்பட்ட ஒரு கதையின் நாயகன் சிட்டுக் குருவி. இன்றைய தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்ற கதை.
பிரமதத்தன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுடைய அரண்மனையில் ஒரு சிட்டுக் குருவி வசித்து வந்தது. பிறப்பால் சிட்டுக் குருவியாக இருந்தாலும், வாழ்க்கைக்கு தேவையான அனுபவத்தையும், ஞானத்தையும் பெற்றிருந்தது. அரசனுக்கு ஒரு மகனும், குருவிக்கு ஒரு குஞ்சும் இருந்தன.
குருவி தினந்தோறும் கடற்கரைக்குச் சென்று அபூர்வமான பழ வகையில் இரண்டை எடுத்து வரும். ஒன்றை தன் குஞ்சிற்கும், மற்றொன்றை அரசகுமாரனுக்கும் கொடுக்கும். அந்த அளவிற்கு தனது குஞ்சையும், அரசனின் மகனையும் சமமாக பாவித்து வந்தது குருவி.
ஓர் நாள். குருவிக் குஞ்சுடன் விளையாடிக் கொண்டிருந்தான் அரசகுமாரன். தவறுதலாக அதனுடைய கழுத்தைத் திருகிவிட்டான். குஞ்சு இறந்து போனது. வழக்கம் போல் இரண்டு பழங்களைக் கொண்டு வந்த சிட்டுக் குருவி தன்னுடைய குஞ்சு இறந்து கிடப்பதை பார்த்தது. அரசகுமாரன் தான் அதைக் கொன்றான் என்பதைத் தெரிந்துகொண்டது. மிகுந்த கோபமடைந்தது.
சிந்திக்கத் தொடங்கியது.
‘அரசனிடத்தில் நட்பு என்பதை எதிர்பார்க்க முடியாது. அரசனுக்கு நல்ல எண்ணம் கிடையாது. செய்த நன்றியை மறந்த அரசகுமாரனுக்கு பாடம் கற்பிக்கப்போகிறேன். அரசகுமாரன் பிறந்த நேரத்திலே என்னுடைய குஞ்சும் பிறந்தது. அவன் பழம் உண்ணுகிற போதே என் குஞ்சும் பழத்தை தின்றது. அவனையே நம்பி அவனிடமே அண்டியிருந்தது. இந்த மூன்றுவிதத் தொடர்புகள் இருந்தும் என்னுடைய குஞ்சை அவன் கொன்ற காரணத்தினால், அரசகுமாரன் மூன்று வகைக் குற்றம் புரிந்தவனாகிறான். அதற்கேற்ற தண்டனையை அவன் அனுபவிக்கட்டும்', என்று மனத்திற்குள் முடிவெடுத்தது குருவி.
எதிரில் நின்று கொண்டிருந்த அரசகுமாரன் மேல் பாய்ந்தது. தன் கால்களால் அவனுடைய இரண்டு கண்களையும் குத்திக் கிழித்தது. அரசகுமாரன் பார்வையிழந்தான். அங்கிருந்தவர்கள் பதறிப் போனார்கள். அரசனிடம் நடந்ததை சொன்னார்கள். அரசன் அங்கு வந்தான். பதறிப்போனான். சற்று நேரத்தில் அமைதியானன். பிறகு குருவியிடம் பேசினான்.
‘குருவியே! என் மகன் உனக்கு பெரும் தீங்கிழைத்தான். நீ அதற்கு பதிலடி கொடுத்து விட்டாய். ஆகையால் இத்துடன் இந்த விவகாரம் முடிந்துவிட்டது. நாம் இருவரும் முன்போலவே நட்புடன் இருப்போம். நீ இங்கேயே தொடர்ந்து வசிப்பாயாக', என்று குருவியிடம் கேட்டுக்கொண்டான் அரசன்.
அரசனின் யோசனையை ஏற்க மறுத்தது குருவி.
‘உன் மகன் எனக்கு தீங்கிழைத்தான். பதிலுக்கு நானும் அவனுக்கு தீங்கிழைத்து விட்டேன். தீங்கிற்கு பதிலாக செய்யப்பட்டதாக இருந்தாலும், நான் செய்த செயல் உனக்கு மாறாத வருத்தத்தை அளித்துவிட்டது. ஒரு இடத்தில் தீங்கு செய்துவிட்டு, தொடர்ந்து அதே இடத்தில் தன் மீது நம்பிக்கை இருக்கும் என்று நினைப்பது முட்டாள்தனம். விரோதம் வந்து விட்ட இடத்தில் என்னதான் நல்ல வார்த்தை பேசப்பட்டாலும், அங்கே நம்பிக்கை வைத்துவிடக்கூடாது. அப்படி நம்பிக்கை வைப்பவன் விரைவில் அழிவான். உறவினர்களில் தாயும், தந்தையும் எப்போதும் நம்பிக்கைக்குரியவர்கள். மனைவி வயல் போன்றவள். மகன் அதில் விதை போன்றவன். இவர்களை நம்புவதற்குக் கால நேரம் உண்டு. உடன் பிறந்தவன் பொருளாசையினால் பகைவனாகக்கூடியவன். கையில் பசையுள்ள வரையில் ஒட்டியிருக்கிறவன் நண்பன். ஆகையால், ஒவ்வொருவனுடைய சுக, துக்கங்கள் மற்றவர்களைப் பொருத்தது அல்ல. கால நேரத்தை அறிந்து நடந்து கொள்பவன் சுகம் பெறுகிறான். மரியாதை உள்ள ஒரு இடத்தில் அவமரியாதை நேர்ந்துவிட்டால், அதன் பின் அங்கே தங்கக்கூடாது. உன் மகன் எனக்குத் தீங்கிழைத்தான். பதிலுக்கு நான் அவனுக்குத் தீங்கிழைத்தேன். இதை நீயோ, நானோ மறக்க முடியாது. நீ என்ன பேசினாலும், உன் மனத்தில் என்ன நினைக்கிறாயோ என்ற சந்தேகம் என்னை வாட்டிக் கொண்டிருக்கும். நான் எப்படி நடந்து கொண்டாலும் உன் மனதிலுள்ள பகை தணிந்துவிடாது. ஆகையால் இந்த இடத்தில் தங்குவது எனக்கு நல்லதல்ல', என்றது குருவி.
அமைதியாக கேட்ட அரசன் தன் கருத்தைச் சொன்னான்.
‘நீயோ, நானோ ஒருவருக்கொருவர் குற்றம் செய்தவர்கள் அல்ல. எல்லாச் செயல்களும் காலத்தின் காரணமாகத்தான் நடக்கின்றன. காலத்தின் காரணமாகப் பிறக்கும் மனிதன், காலத்தின் காரணமாகவே இறக்கிறான். ஆகையால் நமக்குள் நடந்த நிகழ்ச்சிக்கு நீயோ, நானோ காரணம் அல்ல. சுக, துக்கங்களை உண்டாக்குகிற காலம் இந்த நிகழ்சியையும் நடத்திவிட்டது. இதை உணர்ந்து, உன் செயலை நானும், என் மகன் செயலை நீயும் பொறுத்துக் கொள்வோம்', என்றான் அரசன்.
‘எல்லாவற்றிற்கும் காலம் மட்டுமே காரணம் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. காலத்தினால்தான் மரணம் ஏற்படுகிறது என்றால், உறவினன் சாகும்போது ஒருவனுக்கு ஏன் துன்பம் உண்டாகிறது? காலத்தினால்தான் எல்லாமே நடக்கின்றன என்றால் நோயாளிக்கு ஏன் வைத்தியன் சிகிச்சை செய்கின்றான்? காலத்தினால் தான் எல்லாம் நடக்கிரது என்றால் புண்ணிய, பாவங்களில் எதைச் செய்தால் என்ன? இதையெல்லாம் சிந்தித்தால், காலமே எல்லாவற்றிற்கும் காரணம் என்கிற உன் வாதம் சரியானதல்ல என்பது புரியும். நல்லதோ, கெடுதலோ, மனித முயற்சிக்கு காலம் உதவுகிறது. அல்லது இடையூறு செய்கிறது'.
இப்படிக்கூறிய குருவி மேலும் தொடர்ந்தது.
‘துக்கத்திலேயே பெரிய துக்கம் மகனை இழந்த துக்கம்தான். அது ஒருவனை விட்டுவிலகக்கூடிய துக்கம் அல்ல. மகனை நினைத்து உனக்கு அவ்வப்போது என்மீது கோபம் வரும். ஒருவனுக்கு கெடுதலைச் செய்த பிறகு அவனிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது என்று சுக்ராச்சாரியார் கூறியிருக்கிறார். எல்லா நேரத்திலும் ஒருவன் அறிவுள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும். வீடு, மனைவி, வயல், நண்பர்கள் போன்றவை எப்போது வேண்டுமானாலும் கிடைக்ககூடியவை. அவை ஒரு மனிதனுக்கு வந்து சேரும் சேர்க்கைகள். கல்வி, அறிவு போன்றவை உள்ளவனுக்கே அவை கிடைக்கும். தன் தேசம் என்றுகூட பார்க்காமல், தனக்கு மரியாதை இல்லாத இடத்தை ஒருவன் விட்டுவிட வேண்டும். எவள் அன்பாக இருக்கிறாளோ, அவள் மனைவி. எவனால் நன்மை உண்டாகிறதோ அவன் மகன். எவன் நம்பிக்கைக்குரியவனோ, அவன் நண்பன். எந்த இடத்தில் பிழைப்பு கிட்டுகிறதோ அதுவே தனது தேசம். இப்பொழுது எனக்கு இது தேசமல்ல. நம்பிக்கை வைக்கத் தகாத நேரத்தில், நம்பிக்கை வைக்கத் தகாத இடத்தில் நம்பிக்கை வைப்பவன் நாசமடைவான். அந்தத் தவற்றை செய்ய நான் தயாராக இல்லை' , என்று கூறிய குருவி அந்த தேசத்தை விட்டே பறந்து சென்றது.
இந்தக் கதை நமக்கு சொல்லிக்கொடுக்கும் பாடம் என்ன தெரியுமா! விரோதங்கள் மறையலாம், வடுக்கள் மறைவதில்லை. வஞ்சமாக உருப்பெறுகிறது', இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவருடன் பழகும் போது அவர் மனத்தில் புதைந்திருக்கும் விரோதத்தை எப்படி கண்டுபிடிப்பது? அதற்கு ஏதாவது ஸ்கேனர் கருவி இருக்கிறதா! நிச்சயமாக இல்லை.
சரி விஷயத்துக்கு வருவோம். தொலைக்காட்சி செய்திகளில் இன்றைய தினத்தில் அதிகம் இடம் பிடித்திருக்கும் செய்தி, அதிமுகவின் இரண்டு அணிகளின் பேச்சுவார்த்தை. யாருடன் யார் சேருவது?
சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் மற்றொரு அணியும் எதிரெதிராக களத்தில் நிற்கின்றன. இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றும் இடத்தில் சசிகலா தரப்பு இருக்கிறதா? அல்லது ஓபிஎஸ் தரப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தெரிந்தால் இந்த பிரச்னைக்கும் ஒரு முடிவு கிடைத்துவிடும்.
ஓ. பன்னீர் செல்வம் அவர்களே உங்களுடன் சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
சசிகலாவிற்கு முதலமைச்சர் பதவி அளிப்பதை எதிர்த்து தனியொருவராக போராட்டத்தை துவக்கினீர்கள். இது பெரிய ஆபத்தான அரசியல் முடிவு! ஒரு வேளை உங்களுக்கு யாரும் ஆதரவளிக்காமல் போயிருந்தால் உங்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும். இந்த துணிச்சலான முடிவு அரசியலில் பலரின் உண்மையான முகத்தை உலகிற்கு காட்டியது. பலரை சட்டத்தின் பிடியில் தள்ளியிருக்கிறது. நிழல் தலைவர்களாக செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களை நிஜத்தில் காலம் கீழே தள்ளியிருக்கிறது. நம்ம ஊர் எம்எல்ஏக்களின் கூவத்தூர் குத்தாட்டங்களை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆர்.கே நகர் வாக்காளர்களை வசதி படைத்தவர்களாக்கியது. இது போன்ற நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஒரு விஷயத்தை நீங்கள் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பெரும்பான்மையான அதிமுகவினர் தங்கள் அணிக்குத்தான் ஆதரவளித்து வருகிறார்கள். ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் இதை உலகிற்கு உணர்த்தியிருக்கும். இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இந்த உண்மையை உலகம் உணர்வதற்கு மேலும் சில காலம் தேவைப்படுகிறது. அவ்வளவுதான், பொறுத்திருங்கள்.
இத்தனை காலம் இல்லாத வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கென்று தனி அணி ஒன்று இருப்பதைப் போன்ற ஒரு மாயைத் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடப்பதை உணர முடிகிறது. சசிகலா ஆசியோடு முதலமைச்சரான ஒருவர் எப்படி தனி அணியாக இருக்க முடியும்?
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் அணிக்கு சென்றுவிடுமோ என்ற பயம் எதிர் தரப்புக்கு இருப்பது புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக இரு அணிகள் இணைப்பு என்ற நிலையை சசிகலா அணியினர் முன்னிறுத்தியிருக்கிறார்கள். இது உண்மையான முயற்சியல்ல. சசிகலா அணியினர் மூன்று குழுக்களாக பிரிந்து தங்களது உளவியல் விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு தரப்பு நியாயமாக பேச்சுவார்த்தையை வலியுறுத்துகிறது.
மற்றொரு தரப்பு ஓபிஎஸ் தரப்பின் ஈகோவை சீண்டிப்பார்க்கும் விஷயங்களில் ஈடுபட்டிருக்கிறது. தேவையற்ற விமர்சனங்களை செய்கிறது.
மற்றொரு தரப்பு சசிகலா தரப்பு ஆதரவை வெளிப்படையாகவே தெரிவிக்கும் வகையில் மீடியாக்களில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது.
ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்கிறார்கள். அப்படியென்றால் அந்த அணியில் தலைவர் சொல்வதை தொண்டர்கள் கேட்பதில்லையா? கட்டுக்கோப்பான எஃகு கோட்டை என்பார்களே அது பேரிச்சம்பழத்துக்காக விலை போய்விட்டதா? நிச்சயம் இல்லை. தலைமைக்கு எதிராக அந்த அணியில் யாரும் செயல்படமாட்டார்கள். அப்படி செயல்படுபவர்களாக இருந்தால், இத்தனை நாட்களாக 122 எம் எல் ஏக்களை எப்படி தங்கள் வசம் வைத்திருக்க முடியும்? நாம் பார்த்துக் கொண்டிருப்பது மூன்று குழுக்களாக பிரிந்து நடத்தப்படும் நாடகம். கிளைமாக்ஸில் அனைவரும் ஒன்று சேர்ந்துவிடுவார்கள்.
இதை சரியாக புரிந்து கொண்ட உங்கள் அணி, அதற்கான சிறப்பான பதிலை அளித்திருக்கிறது.
நியாயமாக பேச்சுவார்த்தை நடத்தி இரட்டை இலையை மீட்கும் எண்ணம் இருந்தால் இத்தகைய குழப்படி வேலைகளில் எதிர் தரப்பு இறங்கியிருக்காது. சினிமாக்களில் கிளைமாக்ஸில் திடீரென்று வில்லனுக்கு வரும் மனமாற்றம் ஏற்படும். அதைப்போல் மந்திரிகளும், எம்எல்ஏகளும் சசிகலா குடும்பத்தை பற்றிய அவர்களின் எண்ணத்தை திடீரென்று மாற்றிக் கொண்டுள்ளார்கள். கட்சி ஒன்றுபட வேண்டும் என்பதற்காக தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறோம்', என்று சொல்கிறார்கள். ‘எதைச் சொன்னாலும் மக்கள் அதை அப்படியே நம்பி விடுவார்கள்' என்ற நம்பிக்கை அவர்களிடம் இன்னமும் இருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.
உண்மையிலேயே எம்எல்ஏக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டிருந்தால், இணைப்பு என்ற கருத்தை வலியுறுத்தாமல், நேரடியாக உங்களுடன் வந்து இணைந்திருக்கலாமே! மக்கள் செல்வாக்கு தங்களுக்கு இருக்கிறது என்ற அடிப்படி உண்மை மட்டுமே' மனமாற்றம்' என்ற இந்த நாடகத்துக்கு காரணம். எல்லாம் இரட்டை இலைக்காக என்றால், அது கிடைத்தவுடன் வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிவிடுமா?
நடப்பவற்றை பார்க்கும் போது உங்கள் அணியின் கை ஓங்கியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. உங்கள் தரப்பில் பல பாசிடிவான விஷயங்கள் இருக்கிறது.
அதிமுக தொண்டர்களின் பெருவாரியான செல்வாக்கு உங்களுக்கு இருக்கிறது. சசிகலா தரப்பு ஓட்டுக்கு பணம் கொடுத்த போதே அவர்களின் பலவீனம் வெளிப்பட்டுள்ளது.
உங்கள் அணியினர் ஒரே அணியாக செயல்படுகிறார்கள். அணியின் இலக்கை உடன் இருப்பவர்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், எதிர் அணியோ அணியாக செயல்படுவதற்கு பதிலாக பல குழுக்களாக செயல்படுகிறார்கள். இத்தகையவர்களை வைத்துக் கொண்டு எந்த ஒரு இலக்கையும் அடைய முடியாது. யாரோ சுட்டிக் காட்டும் இலக்கை நோக்கி பயணிப்பவர்களாக மட்டுமே அவர்கள் இருக்கின்றார்கள்.
சமீபத்திய ரெய்டுகள், வழக்குகள் ஆகியவற்றை பார்க்கும் போது எதிர் அணியை விபரீத அணியாகவே மக்கள் பார்க்கின்றனர்.
ஓ. பன்னீர் செல்வம் அவர்களே! மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எதற்காக மற்றவர்களிடம் கொண்டு சேர்க்கிறீர்கள்! ‘நீ அவல் கொண்டு வா, நாம் உமி கொண்டு வருகிறேன். இருவரும் ஊதி ஊதி தின்னலாம்', என்று சொன்னானாம் ஒரு புத்திசாலி. அதைப் போல எதிர் தரப்பு இணைப்பு என்ற ஆயுதத்தை கையிலெடுத்திருக்கிறது. அவர்கள் கொண்டு வந்த உமியை ஊதிவிட்டு, நீங்கள் வைத்திருக்கும் அவலை தின்றுவிட்டு சென்றுவிடுவார்கள். அவர்கள் வேண்டுமானால் புத்திசாலிகளாக இருக்கட்டும். நாம் முட்டாள்கள் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்கவேண்டும். இதையெல்லாம் நீங்கள் அறியாதவரல்ல.
மகாபாரதம் சிட்டுக்குருவி வடிவில் நமக்கு சொல்லிக் கொடுக்கும் பாடம் இதுதான்.
மன வேற்றுமைக்குப் பிறகு நிபந்தனைகளுடன் கூடிய நட்பை ஏற்படுத்திக் கொள்வது அழிவை மட்டுமே ஏற்படுத்தும். ஆகையால், இரு அணிகள் இணைப்பு என்ற முயற்சியை கைவிடுங்கள். குழு அமைத்து கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தும் என்ற சித்தாந்தங்களை கைவிடுங்கள். அவை ஏட்டுச் சுரைக்காய். அது நிழல் தலைவர்களுக்கு மட்டுமே சாதகங்களை ஏற்படுத்திக் கொடுக்கும்.
ஆகையால் உங்கள் வழியில் கட்சியை கைப்பற்றும் முயற்சியை தொடருங்கள். மக்களை தங்கள் வீட்டில் சந்திக்காமல் ஒவ்வொரு தொகுதிக்கும் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளுங்கள். மக்களிடம் உண்மை நிலையை கொண்டு சேருங்கள். சிட்டுக்குருவி சொல்லிக் கொடுத்த ராஜ நீதியை கடைபிடியுங்கள்.
- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...