அதிமுக அணிகள் இணைப்பில் இழுபறி
தொண்டர்கள் உள்பட அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் இரு அணிகளின் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) இணைப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவில்லை.


தொண்டர்கள் உள்பட அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவின் இரு அணிகளின் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) இணைப்பு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவில்லை. இரு அணிகளின் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.
ஓபிஎஸ் அறிவிப்பார்: ''அதிமுக அணிகள் இணைப்புக் குறித்து கட்சி நிர்வாகிகளிடம் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை தொடர்ந்து 6 மணி நேரம் கருத்துக் கேட்பு நடத்தினார்; இதன் மூலம் ஜனநாயக நடைமுறையை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். இணைப்புக் குறித்த அறிவிப்பை ஓ.பன்னீர்செல்வமே விரைவில் வெளியிடுவார்'' என்று ஓபிஎஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி கூறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: முன்னதாக அதிமுக இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக
முக்கிய அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார். சசிகலா குடும்பத்தை கட்சி, ஆட்சியில் இருந்து விலக்கி வைப்பது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பது ஆகிய ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கியக் கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, இரு அணிகளும் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே அதிமுகவின் இரு அணிகளும் பரபரப்பாகக் காணப்பட்டன.
5 மணி நேரம் காத்திருப்பு: வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கிய ஆலோசனை சுமார் 5 மணி நேரம் வரை நடைபெற்றது. ஓ.பி.எஸ்., தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படாத காரணத்தால் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பலரும் இரவு 9 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர். இந்த தொடர் ஆலோசனைகளால் அதிமுக அம்மா அணியில் பெரும் பரபரப்பு நிலவியது.
முடிவு எடுக்க முடியாத நிலையில் ஓபிஎஸ் அணி: அதிமுக இணைப்புக் குறித்து உறுதியான முடிவெடுக்க முடியாமல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குழப்ப நிலையில் இருந்து வருகிறார். அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் வெள்ளிக்கிழமை தொடர்ந்து 6 மணி நேரம் நடைபெற்றது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரது இல்லத்திலும் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி இரவு 10 மணி வரை ஆலோசனை நீடித்தது. சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், மாநில நிர்வாகிகள் என ஒவ்வொருவரையும் ஓபிஎஸ் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முன்னாள் அமைச்சர்கள் நந்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன் அவைத் தலைவர் மதுசூதனன், சி.பொன்னையன் உள்பட முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
நிர்வாகிகள் கேட்ட கேள்வி: ஆலோசனையில் பங்கேற்றவர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை கேட்டார். அப்போது 2 அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் பதவிக்காக எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்துவிட்டால், உங்களை நம்பி இத்தனை நாள்கள் செயல்பட்ட நிர்வாகிகள் நிலை என்ன என்று அனைவரும் குரல் எழுப்பியுள்ளனர்.
சிபிஐ விசாரணை கோரும் கே.பி.முனுசாமி: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும். அப்படி அமைத்தால்தான் இணைப்பு பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பமான நிலையில் இருந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து அனைத்து நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து நிர்வாகிகள் ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்பினர். கூட்டம் முடிந்து மதுசூதனன் செல்லும்போது, ஓ.பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுப்பார் என்று தெரிவித்தார்.
இன்று அறிவிப்பு? இரு அணிகள் இணைப்புத் தொடர்பாக தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், ஆலோசனைக்குப் பிறகு இணைப்பு தொடர்பாக சனிக்கிழமை (ஆக.19) முடிவு தெரிவிக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா சமாதி

அதிமுக அணிகளின் இணைப்புத் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திலும் ஓபிஎஸ் இல்லத்திலும் ஆலோசனைக் கூட்டங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி என்றைக்கும் இல்லாதது போன்று திடீரென வெள்ளிக்கிழமை மாலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
இதற்கான அறிவுறுத்தல் முதல்வர் அலுவலகத்தில் இருந்து பொதுப்பணிக்குத் துறைக்கு வழங்கப்பட்டிருந்தது.
முதல்வர் பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தங்களது அணிகள் இணைப்புக் குறித்த அறிவிப்பை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வெளியிடுவார்கள் எனச் செய்திகள் பரவின. இதற்காகவே ஜெயலலிதாவின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின.
தொண்டர்கள் ஏமாற்றம்: அதையடுத்து இரண்டு அணி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டர்கள் சென்னை மெரீனா கடற்கரையில் குவிந்தனர்.
இரவு 9.30 மணியளவில் இரு அணிகளில் இருந்தும் எந்த அறிவிப்புகள் வெளியாகாததால் ஜெயலலிதா நினைவிடம், அதிமுக அலுவலகம் ஆகிய இடங்களில் இருந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
ஓபிஎஸ்ஸை சந்தித்த அமைச்சர்கள்
சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை வெள்ளிக்கிழமை பிற்பகல் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணிஆகியோர் சந்தித்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நலன் குறித்து விசாரிக்க அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்றனர். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இரு அணிகளின் இணைப்புத் தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இல்லத்தில் அதிமுக அம்மா அணியின் நிர்வாகிகள் கூடினர். அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் அணிகள் இணைப்புத் தொடர்பாக ஆலோசித்தனர். ஓ.பன்னீர்செல்வம் அணியின் அறிவிப்பு குறித்து இரவு 9.30 மணி வரை
காத்திருந்தனர். ஓபிஎஸ் அணியிலிருந்து தகவல் வராததையடுத்து முதல்வர் இல்லத்திலிருந்து அமைச்சர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...