இத்தனை நடிப்பும் மத்திய அரசான பா.ஜ.க.வினால்தான் திரைமறைவில் இயக்கப்பட்டது என்ற உண்மை மக்களுக்குத் தெரிந்திருந்தாலும், டெல்லியில் உள்ள பா.ஜ.க.வினரும், இங்குள்ள அக்கட்சியின் தலைவர்களும் அதை மறைத்து - மறுத்து வந்தனர். ஆனாலும், திரைப்படத்தின் ஏதோ ஒரு இடத்தில் இயக்கியவர்கள் வெளிப்படுவது போல, ‘இணைப்பு’க்கு ஏற்பட்ட திடீர் சிக்கலின்போது ஆபத்பாந்தவனாக அவதாரம் எடுத்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும், பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களிடம் செல்வாக்குள்ளவருமான ஆடிட்டர் குருமூர்த்தி அவர்களுடைய வீட்டில் அ.தி.மு.க.வின் இருதரப்பினரும் ஓடோடிச் சென்று ஆலோசனை நடத்தி, பதவி - அதிகாரங்களை உறுதி செய்து கொண்டதில் “இணைப்புக்கு முகமூடியாக” இருந்து செயல்பட்ட பா.ஜ.க.வின் செயல் அம்பலமாகிவிட்டது. தர்மயுத்தம், ஒருதாய் மக்கள் எனத் தலைப்புகள் மாறினாலும், டெல்லியிலிருந்து இயக்கப்படும் கயிறுக்கேற்ப தலையாட்டும் பொம்மைகள் நாங்கள் என்பதை அ.தி.மு.க.வின் இரு தரப்பினரும் அப்பட்டமாக நிரூபித்துவிட்டனர்.