தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
51 ஆயிரம் விண்ணப்பம்: தமிழகத்தில் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவப் (பிடிஎஸ்) படிப்புகளில் அரசு இடங்களுக்கு 31,629 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 20,244 விண்ணப்பங்களும் என மொத்தம் 51,873 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் அரசு இடங்களுக்கு 27,212 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 18,040 விண்ணப்பங்களும் தகுதியானவை.
மொத்த இடங்கள்: தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,445, ராஜா முத்தையா கல்லூரியில் 127, அகில இந்திய ஒதுக்கீடு போக மீதம் சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் 102, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 860 என மொத்தம் 3,534 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதுதவிர 592 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
பல் மருத்துவத்தைப் பொருத்தவரை அரசு கல்லூரியில் 85, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 68, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,045 என மொத்தம் 1,198 அரசு பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர, 715 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
தரவரிசைப் பட்டியல்: தகுதி பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ, தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.