

தமிழக சட்டப் பேரவை வரும் 8-ஆம் தேதி கூடுகிறது. ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து நடைபெறும் முதல் கூட்டத் தொடர் என்பதால், அதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார். தமிழகத்தின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்ற பின், அவர் ஆற்றும் முதல் உரை இதுவாகும்.
இதைத் தொடர்ந்து, ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பேரவையில் முன்மொழியப்பட்டு அந்தத் தீர்மானத்தின் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நடைபெறும். இதற்காக, சட்டப் பேரவை நான்கு நாள்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துறை ரீதியான செலவினங்களுக்குத் தேவையான நிதியைக் கோர பேரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக சட்டப் பேரவைக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் தொடங்கி, ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. ஒரு கூட்டத் தொடருக்கும், மற்றொரு கூட்டத் தொடருக்குமான இடைவெளி ஆறு மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில், வரும் ஜனவரியில் கூட்டத் தொடரை தொடங்குவதற்கான அறிவிப்பை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதலுடன், பேரவைச் செயலாளர் கே.பூபதி வியாழக்கிழமை வெளியிட்டார். அந்த அறிவிப்பின் விவரம்:
பேரவைக் கூட்டத்தை வரும் 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் கூட்ட ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். அன்றைய தினம் ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவல் ஆய்வு குழு: பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது தொடர்பாக, வரும் 8-ஆம் தேதியன்று ஆளுநர் உரைக்குப் பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அடங்கியுள்ளனர். ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நான்கு நாள்களுக்கு கூட்டத் தொடர் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஆளும்கட்சியால் முன்மொழியப்படும். அவ்வாறு முன்மொழியப்படும் தீர்மானத்தின் மீது, உறுப்பினர்கள் கருத்துகளைத் தெரிவித்த பிறகு முதல்வர் பழனிசாமி பேசுவார். இந்த நிகழ்வுகள் அனைத்தும் நான்கு நாள்கள் நடைபெறும்.
புதிய ஆளுநரின் உரை: தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள், புதிதாகச் செயல்படுத்த உள்ள திட்டங்கள் ஆகியன ஆளுநர் உரையில் முக்கிய அம்சங்களாக இருக்கும். ஆளும் அரசு எத்தகைய திசையை நோக்கிச் செல்ல வேண்டும், எத்தகைய திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்கிற அறிவுரைகளையும் ஆளுநர் தனது உரையில் தெரிவிப்பார் எனக் கூறப்படுகிறது. தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்ற பிறகு, அவர் ஆற்றும் முதல் சட்டப் பேரவை உரை இதுவாகும்.
ஆர்.கே.நகரும், டிடிவி தினகரனும்: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று, சுயேச்சை எம்.எல்.ஏ.,வாக டிடிவி தினகரன் பேரவைக்குள் வர உள்ளார். இதனை ஆளும்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் எந்த வகையில் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது மிகவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், அவருக்கு பேரவையில் எந்த இருக்கை ஒதுக்கப்படும் என்பதும் முக்கியமான அம்சமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.