/

அதிமுகவின் வாக்குகளை பாஜக பக்கம் திருப்ப மோடி முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுகவின் ஆதரவு வாக்குகளைப் பாஜகவின் பக்கம் பிரதமர் நரேந்திரமோடி திருப்பப் பார்ப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:32 pm

DIN

அதிமுகவின் ஆதரவு வாக்குகளைப் பாஜகவின் பக்கம் பிரதமர் நரேந்திரமோடி திருப்பப் பார்ப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு விலக்கு அளிக்கக் கோரி திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நேரடி ஆதரவு அளிக்காவிட்டாலும், தார்மிக ஆதரவையாவது அதிமுக வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளின் சார்பில் நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஆனால், போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறை கைது செய்திருப்பது ஆளும்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
நீட் தேர்வு விவகாரத்தில் அரசுக்கு உண்மையில் அக்கறை இருக்குமேயானால், அப்துல்கலாம் நினைவு மண்டபத்தைத் திறக்க பிரதமர் தமிழகம் வந்தபோது, அவர் பங்கேற்ற அதே மேடையில் பேசிய முதல்வர், நீட் தேர்வு குறித்துப் பேசி, மாணவர்களின் எதிர்கால நலனுக்கான உத்தரவாதத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
தமிழகத்தில் எப்படியாவது கால் ஊன்றிவிடமுடியுமா என பின்வாசல் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கும் பாஜகவின் பிரதமர் மோடி அந்த நினைவு மண்டபத் திறப்பு நிகழ்வில், நூற்றாண்டு காணும் எம்ஜிஆர் பற்றியும், ஜெயலலிதா பற்றியும் புகழ் வார்த்தைகள் கூறி, அதிமுக ஆதரவு வாக்குகளைத் தங்கள் பக்கம் திருப்ப இயலுமா என முயற்சி செய்திருக்கிறார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களே கூட, இந்த ஆட்சி எப்போது தொலையும் என எதிர்பார்த்துள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலக் கனவுகளை நொறுக்கும் நீட் தேர்வுக்கு வக்காலத்து வாங்கும் மத்திய பாஜக அரசையும், அதனை எதிர்க்கத் துணிவில்லாமல் இரட்டை வேடம் போடும் அதிமுக அரசையும் ஒரு சேர மக்கள் வெறுப்பதைக் காண முடிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.