

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் பதவியை டிடிவி தினகரனும், தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி கே.பழனிசாமியும் வகிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டி.டி.வி.தினகரனை உடனே கட்சிப் பணிக்கு அழைக்க வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்தனர்.
தமிழக சட்டப் பேரவையில் உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு ஆகிய மானியக் கோரிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் பதிலளித்துப் பேசினர்.
பேரவை நடவடிக்கைகள் வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் முடிவடைந்தன. அதன் பின்னர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, சட்டப் பேரவையில் இருந்தபடி அமைச்சர்களிடம் சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, பிரின்ஸ் ஆகியோரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து உரையாடினர்.
திடீர் சந்திப்பு: இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர். முதல்வர் அறையில் இந்த சந்திப்பு நடந்தது.
தங்க தமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில் பாலாஜி, இன்பதுரை, வெற்றிவேல் உட்பட 32 எம்.எல்.ஏ.க்கள், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்தனர். மாலை 4.45 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு 5.15 வரை நீடித்தது.
இந்த சந்திப்பு குறித்து கேட்டபோது எம்.எல்.ஏ. ஒருவர் கூறியதாவது:
கட்சியில் டி.டி.வி.தினகரனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினோம். ஆட்சிக்கு நீங்கள் (முதல்வர் எடப்பாடி), கட்சிக்கு டி.டி.வி.தினகரன் என்றிருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று தெரிவித்தோம். மேலும் கட்சிப் பணியாற்ற வேண்டும் என்று டி.டி.வி.தினகரனுக்கு உடனே அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வலியுறுத்தினோம்.
இதுபற்றி கட்சி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசிக்க இருப்பதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக அலுவலகத்தில் கூட்டம்: இந்த சந்திப்பைத் தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 6 மணியளவில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது. இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.