8 லட்சம் மருந்துக் கடைகள் இன்று வேலை நிறுத்தம்

இணையதள மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து விற்பனையாளர்கள் செவ்வாய்க்கிழமை (மே 30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
8 லட்சம் மருந்துக் கடைகள் இன்று வேலை நிறுத்தம்
Published on
Updated on
2 min read

இணையதள மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து விற்பனையாளர்கள் செவ்வாய்க்கிழமை (மே 30) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 20,000 மருந்து விற்பனையாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

போராட்டம் ஏன்? இணையதளத்தில் மருந்துகளை விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முயற்சி வருகிறது. இணையதளத்தில் மருந்துகள் விற்பனை செய்தால் சில்லறை விற்பனையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்; மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எளிதில் மருந்துகள் கிடைக்கும்; போதை மருந்துகள், மயக்க மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்டவை எளிதில் கிடைக்கும்;
வேலைநிறுத்தம்... கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை பாதிக்கப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து விற்பனையாளர்கள் செவ்வாய்க்கிழமை (மே 30) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்.

தொலைபேசி எண்கள் அறிவிப்பு

வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று வலியுறுத்தி மருந்து விற்பனையாளர்களிடம் அரசுத் தரப்பில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து மாவட்டந்தோறும் உள்ள முக்கிய மருந்துக் கடைகளின் தொலைபேசி எண்கள் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு மருந்து விற்பனையாளர்கள் அளித்துள்ளனர்.
மருந்துகளுக்கான அவசரத் தேவை ஏற்படும் பொதுமக்கள் மருந்து கட்டுப்பாட்டு இயக்ககத்துக்கு 044-24321830 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால், அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மருந்துக் கடை உரிமையாளரின் தொலைபேசி எண் வழங்கப்படும். குறிப்பிட்ட நபரைத் தொடர்பு கொண்டு, தேவையான மருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர 044-28191522 என்ற தொலைபேசி எண்ணையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையும் தொடர்பு கொண்டு மருந்துகளை வாங்குவதற்குத் தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவசரத் தேவைக்கு...

அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல் இயங்கும். தனியார் மருத்துவமனை வளாகங்களில் உள்ள மருந்தகங்களிலும் விற்பனை நடைபெறும். மேலும் பொதுமக்களின் அவசரத் தேவைக்கும் மருந்துகளை விநியோகிப்பதற்கு அந்தந்த மாவட்டங்களில் போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


1 லட்சம் ஹோட்டல்கள் இன்று வேலைநிறுத்தம்

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் தனியார் உணவக உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஹோட்டல்கள் பங்கேற்க உள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஹோட்டல்கள் மூடப்பட்டிருக்கும். குளிர்சாதன வசதி உள்ள ஹோட்டல்களுக்கு 8 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரியை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு உணவக உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கூடுதல் வரி விதிப்பதன் மூலம் உணவுப் பொருள்கள் விலை உயரும். இதனால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, உணவகங்கள் மீதான வரி விதிப்பைக் குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செவ்வாய்க்கிழமை (மே 30) நடைபெறும் என தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

10 ஆயிரம் மருந்துக் கடைகள் இயங்கும்!

மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் மருந்துக் கடைகள் செவ்வாய்க்கிழமை (மே 30) இயங்கும் என்று சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் டபிள்யு. எஸ்.மோகன் குமார் கூறினார்.
இதுதொடர்பாக அவர் சென்னை செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது:
சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருந்து கட்டுப்பாட்டுத் துறையினரிடம், மாநில அரசின் சார்பில் இணையதள மருந்து விற்பனைக்கு ஆட்சேபம் தெரிவித்து குறிப்பாணை அனுப்புமாறு அவர் அறிவுறுத்தினார். இதையடுத்து சென்னை, மதுரை, கரூர் ஆகிய 3 மாவட்டங்களின் உறுப்பினர்கள் இந்தக் கடையடைப்பில் பங்கேற்பதில்லை என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேசமயம், கருப்புப் பட்டை அணிந்து மருந்து விற்பனையில் ஈடுபட உள்ளோம்.
அந்த வகையில் குறிப்பிட்ட 3 மாவட்டங்களிலும் 10 ஆயிரம் கடைகள் திறந்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com