

சென்னைக்கு குடிநீர் செல்லும் முக்கிய நீராதாரமான கிருஷ்ணா கால்வாயில் திருவள்ளூர் நகராட்சியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் கலப்பதால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும்அபாயம் நிலவுகிறது.
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி நீர்த்தேக்கம் விளங்கி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இந்த அணை நிரம்பினால் சென்னைக்கு குடிநீர் திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் நீரானது, கிருஷ்ணா நதிநீர் கால்வாய் வழியாக தலக்காஞ்சேரி, ஈக்காடு, செவ்வாப்பேட்டை, சிறுகடல், பாக்கம் வழியாக 30 கி.மீ. சென்று, செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளைச் சென்றடையும். பின்னர், அங்கிருந்து சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்கு அனுப்பப்பட்டு வரும்.
இந்நிலையில், திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பெரும்பாக்கம், எடப்பாளையம், பஜார் வீதி மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரானது மழை நீர் கால்வாய் மூலம் கிருஷ்ணா கால்வாயில் கலக்கிறது.
அந்த வகையில் தலாக்காஞ்சேரி, ஈக்காடு இடையே உள்ள கிருஷ்ணா கால்வாயில் ரசாயனக் கழிவு நீரும் கலக்கிறது. மேலும், அப்பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளைச் சேர்ந்தவர்கள் இறைச்சிக் கழிவுகளை கால்வாய் ஓரம் கொட்டுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் நடந்து செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், காற்றும் வீசும்போது, கழிவுநீரிலிருந்து பறக்கும் நுரையால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
சென்னை மக்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் திருவள்ளூர் நகராட்சியின் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
திருவள்ளூர் நகராட்சி ஆணையர் செந்தில்குமார் கூறியதாவது: மழைக் காலங்களில் பெய்யும் நீரை வெளியேற்றவே இந்த மழை நீர்க் கால்வாய் பயன்படுத்தப்பட்டது.
தற்போது, அப்பகுதியில் குடியிருப்புகளில் இருந்து பொதுமக்கள் கழிவு நீரையும் மழைநீர்க் கால்வாயில் விடுகின்றனர். பாதாளச் சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தபின், இக்கால்வாயில் கழிவு நீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.