மழை நீர் சேமிப்பில் மக்கள் கவனம் செலுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னையில் 3 நாள்களில் 200 மில்லி மீட்டருக்கும் கூடுதலாக மழை பெய்துள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இந்த அளவு மழை பெய்திருந்தால் நிலத்தடி நீர் அளவு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருக்கும்.
ஆனால், சென்னையில் நிலத்தடி நீர் அளவு, கிணறுகளின் நீர் மட்டத்தைக் கொண்டு, பார்த்து உணரக்கூடிய அளவுக்கோ, அளவிடும் அளவுக்கோ உயரவில்லை. பெய்த மழைநீர் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் புதிய ஏரிகளாக உருவானது போன்று தேங்கி நிற்கின்றன. சில இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.
உண்மையில் ஒரு கிரவுண்ட் பரப்பளவில் 3 நாள்களில் 200 மி.மீ அளவுக்கு மழை பெய்திருந்தால் 4.8 லட்சம் லிட்டர் நீர் கிடைத்திருக்கும். சென்னை பெருநகரத்தின் பரப்பளவு 1189 சதுர கி.மீ ஆகும். அப்படியானால் இந்தப் பரப்பளவில் எவ்வளவு நீரை சேமித்து வைத்திருக்கலாம், அதைக் கொண்டு எத்தனை மாதத்துக்கான குடிநீர் தேவையைச் சமாளித்திருக்கலாம் என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு நீரையும் நாம் வீணடித்திருக்கிறோம்.
மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்க முடியாமல் வீணடிப்பதில் அரசுக்கு எவ்வளவு பங்குண்டோ, அதே அளவு பங்கு பொதுமக்களாகிய நமக்கும் உண்டு. மழைநீர் சேமிப்புத் திட்டம் என்பது ஒரு கல்லில் இரு மாங்காய் அடிக்கும் திட்டமாகும். வீடுகளிலும், சாலையோரங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன் சாலைகளில் தண்ணீர் தேங்குவதையும் தடுக்க முடியும். அதன் மூலம் கொசு உற்பத்தியையும், அதனால் நோய் பரவுவதையும் முற்றிலுமாகத் தடுக்க முடியும்.
எனவே, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களின் வீடுகளிலும், குடியிருப்புகளையொட்டி உள்ள பொது இடங்களிலும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் நோயற்ற, குடிநீர் தட்டுப்பாடற்ற வாழ்க்கையை உறுதி செய்து முடியும் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.