மின் மீட்டர்கள் கொள்முதலுக்குத் தடை: தலைவர்கள் வரவேற்பு
மின் மீட்டர்கள் கொள்முதல் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.


மின் மீட்டர்கள் கொள்முதல் செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின்: தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு 29 லட்சத்து 88 ஆயிரம் மின் மீட்டர்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கொள்முதல் செய்யப்படும் மின்மீட்டரை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த கேபிடல் பவர் என்ற நிறுவனத்தின் குறைந்தபட்ச விலையை நிராகரித்த தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், அதிக விலை குறிப்பிட்டிருந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளது.
இதை எதிர்த்து கேபிடல் பவர் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில், மின் மீட்டர்கள் கொள்முதல் செய்ய மின் வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏற்கெனவே ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் மூழ்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின் கொள்முதல் செய்ததே, இதற்கு முக்கியக் காரணம். அதனைச் சமாளிக்க மக்களின் தலையில் மின்கட்டண உயர்வைச் சுமத்தியிருப்பது, ஏற்கெனவே தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மின்சார மீட்டர்களை அதிக விலை கொடுத்து வாங்க ஒப்பந்தம் செய்திருப்பது வியப்பளிக்கிறது. இதுபோன்ற முறைகேடுகளுக்காக மின்பகிர்மானக் கழகத்தை பலி கொடுத்து விடக்கூடாது.
அன்புமணி: தமிழ்நாடு மின் வாரியத்துக்கு மின் மீட்டர்களை கொள்முதல் செய்வதில் ரூ.12.50 கோடி அளவுக்கு நடைபெறவிருந்த ஊழல் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறைந்த விலையில் மின் மீட்டர்களை வழங்க முன்வந்த நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளியை ஏற்காமல் அதிக விலை குறிப்பிட்டிருந்த நிறுவனத்தின் ஒப்பந்தப் புள்ளியை மின்சார வாரியம் ஏற்றுக்கொண்டு கொள்முதல் ஆணையை வழங்கியிருக்கிறது. இதை எதிர்த்து கேபிடல் பவர் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மீட்டர்களை வாங்கத் தடை விதித்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...