

சென்னை: மாணவி அனிதா தற்கொலையைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 6வது நாளாக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் இரண்டாம் நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏராளமான கல்லூரி மாணவர்களுடன் பள்ளி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மாணவர்களின் போராட்டம் பெரிய அளவில் வெடித்துவிடக் கூடாது என்பதற்காக சென்னை மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் கூட போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலர், நேற்று மதியம் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குள் நுழைந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர், அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பலரை காவல்துறை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றும், சிலரை இழுத்துச் சென்றும் வெளியேற்றியது.
அப்போதும் ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் குரல் எழுப்பினர். அதில் ஒரு கல்லூரி மாணவி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் தியானம் செய்ய மட்டும்தான் அனுமதி வழங்குவார்களா? மாணவர்கள், அடிப்படை உரிமைகளைக் கேட்டு போராட அனுமதிக்க மாட்டார்களாக என்று கேள்விகளை எழுப்பினார். அவரை பெண் காவலர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அப்புறப்படுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.