நவோதயா பள்ளிகளை தொடங்கக் கூடாது: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு முயற்சிக்கக் கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு முயற்சிக்கக் கூடாது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும் அடுத்தகட்ட முயற்சியாக ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிடுவது கண்டனத்துக்குரியது. மாநிலத்தின் கல்வி அதிகாரத்தைப் பறித்துக் கொண்டு, ஒரு மாநிலத்தில் ஆரம்பப் பள்ளிகளில் கூட என்ன கல்வி கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பையும் மத்திய அரசு பறித்துக் கொள்ளத் துடிப்பது, கூட்டாட்சித் தத்துவத்துக்கே துரோகம் இழைக்கும் செயல்.
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட வழக்கில், உறுதியுடன் இருமொழிக் கொள்கையை எடுத்து வைக்காமல் அலட்சியம் காட்டிய தமிழக அரசின் செயல்பாடுகளும் கண்டனத்துக்குரியவை.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் நேரடி நிர்வாகத்தில் உள்ள நவோதயா வித்யாலயா சமிதி என்ற அமைப்பின் மூலம் நடத்தப்படும் ஜவஹர் வித்யாலயா பள்ளிகளில், முழுக்க முழுக்க ஹிந்தி மொழிதான் ஆதிக்கம் செலுத்துகிறது.
ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை தமிழில் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டாலும் கட்டாயம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. இந்தப் பள்ளிகளை இயக்கும் தலைமையகமான நவோதயா வித்யாலயா சமிதி, உத்தரப்பிரதேச மாநில, பள்ளிகளில் மும்மொழி கொள்கையைக் கடைப்பிடிக்கிறது.
இந்தப் பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்க அனுமதித்தால் தலைமை அலுவலகத்துடன் அலுவல் மொழியான ஹிந்தியில்தான் தொடர்பு கொள்ள வேண்டும். கடிதப் போக்குவரத்துகள் ஹிந்தியில் இருக்கும். ஹிந்தி தெரிந்தவர்களை ஊழியர்களாக நியமிக்க வேண்டும். இந்தப் பள்ளிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணிக்குச் செல்ல விரும்பினால், நிச்சயம் ஹிந்தியில் தேர்ச்சி பெற்றவராக இருக்கும் சூழல் உருவாகும். எனவே, மத்திய அரசு நவோதயா பள்ளிகளைத் திறக்கும் எண்ணத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். உண்மையிலேயே கிராமப்புற மாணவர்கள் முன்னேற்றத்தில் மத்திய அரசுக்கு அக்கறை இருந்தால், மாநில அரசுக்கு வழங்கும் கல்வி நிதியை அதிகரிக்க வேண்டும். மேலும் நீட் தேர்விலிருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கும் தமிழகத்தின் இரு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...